தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏற்றுமதித் தடை, வரி விதிப்பு: தளர்த்த வழிவகை காண சீனா, அமெரிக்கா இணக்கம்

2 mins read
b47a3f8d-42c7-4d60-8f90-c12e580f501c
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக்கும், சீனத் துணைப் பிரதமர் ஹி லிஃபெங்கும் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். - படம்: புளூம்பெர்க்

லண்டன்: அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை சீராகத் தொடரவும், சீன அரிய கனிமவளங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடைகளை அகற்றவும் வழி வகைகளை ஆராய ஒப்புக்கொண்டுள்ளன.

எனினும், அவை குறித்து நீண்டகாலமாக நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் விதமான எவ்வித அறிகுறியையும் அவ்விரு நாடுகளும் வெளிக்காட்டவில்லை.

அவ்விரு நாடுகளும் லண்டனில் இரண்டு நாள்களாக தீவிரப் பேச்சுவார்த்தையில் இறங்கின. அதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஹாவர்ட் லுட்னிக், ஜெனிவா நகரில் கடந்த மாதம் இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் வரி விதிப்பதைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை பற்றிக் குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியான தற்போதைய பேச்சுவார்த்தையில், ‘வெற்று உடலில் சதைப் பிடிப்பு’ ஏற்றப்பட்டுள்ளதாக உவமை மொழியில் கூறினார்.

எனினும், ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை சீன அரிய கனிமவளங்களின் ஏற்றுமதி தொடர்பில் முறிந்தன. அதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பகுதி மின்கடத்தியை வடிவமைக்கும் மென்பொருள், விமானங்கள், மற்ற பொருள்கள் ஆகியவற்றுக்குத் தடை விதித்தார்.

லண்டன் பேச்சுவார்த்தை குறித்து விளக்கிய திரு லுட்னிக், சீனக் கனிமவளங்கள், காந்தப் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களின் கட்டுப்பாடுகளும் சமநிலையான வகையில் நீக்கப்படும் என்று விளக்கினார்.

எனினும், அது குறித்து அவர் விவரங்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை லண்டன் நேரப்படி நள்ளிரவில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

இனி இருதரப்பும் தங்களுக்கு இடையே ஏற்பட்ட இணக்கத்தை தத்தம் நாட்டு அதிபரிடம் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலைப் பெறும் முயற்சியில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது.

“அந்த இணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது முறையாக அமல்படுத்தப்படும்,” என்று திரு லுட்னிக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்