மட்ரிட்: தங்களுக்கு இடையிலான வர்த்தகப் பூசல்களுக்குத் தீர்வுகாண அமெரிக்க, சீன அதிகாரிகள் ஸ்பானியத் தலைநகரில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகால வர்த்தகப் பூசல்கள் நிலவுகின்றன. குறுங்காணொளிக்கான சீன கைப்பேசிச் செயலி டிக்டாக்கை அமெரிக்காவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான காலக்கெடு நெருங்குகிறது.
அதேநேரம், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை சீனா நிறுத்துவதற்கு ஏதுவாக அதன் மீது வரிகளை விதிக்குமாறு ஜி7 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்கா நெருக்கி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் மட்ரிட் நகரில் இரு நாடுகளையும் சேர்ந்த அமைச்சரவைப் பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) சந்தித்துப் பேச உள்ளனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.50 மணிக்குப் பேச்சுவார்த்தைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவ்விரு நாடுகளின் பிரதிநிதிகளும் நான்கு மாதங்களில் நான்காவது முறையாகச் சந்தித்துப் பேசுகின்றனர்.
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் சீனாவின் துணைப் பிரதமர் ஹி லைஃபெங்கை ஐரோப்பிய நகரங்களில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இதற்கு முன்னர் ஜூலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த மூவருடன் சீனாவின் உயர்மட்ட வர்த்தகப் பேச்சாளர் லி செங்கெங்கும் இணைந்துகொண்டார்.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் இரண்டாம் முறை பதவியேற்றப் பின்னர் வரிவிதிப்பு காரணமாக அமெரிக்க-சீன வர்த்தக உறவில் முட்டுக்கட்டை நிலவுகிறது. அதனைச் சீர்ப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் பொருள்களுக்கு தாம் விதித்த 55 விழுக்காட்டு வரிவிதிப்பை நவம்பர் 10ஆம் தேதி வரை தள்ளி வைக்க திரு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பெய்ஜிங்குடன் உறவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் அண்மைய ஆண்டுகளாக முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்க-சீன பேச்சுவார்த்தையை தமது நாட்டில் நடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
அமெரிக்காவில் டிக்டாக் செயலியைப் பயன்பாட்டிலிருந்து விலக்குவதற்கான காலக்கெடு வரும் புதன்கிழமையுடன் (செப்டம்பர் 17) முடிவடையும் நிலையில் அதனை நீட்டிப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.