லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்கா-சீனா

2 mins read
44352f53-ad54-4794-b515-e3b01fdc75b8
லண்டனில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் (இடது), வர்த்தக அமைச்சர் ஹவ்வார்ட் லுட்னிக் கலந்துகொள்வார்கள் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். - படம்: ஏஎஃப்பி

லண்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூன்று முக்கிய அமைச்சர்கள் லண்டனில் சீனாவின் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளனர்.

அந்த இருநாட்டு அதிகாரிகளின் சந்திப்பு திங்கட்கிழமை (ஜூன் 9) நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவும் வர்த்தகப் பூசலைக் குறைக்க இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான வர்த்தகப் பூசல் ஏற்பட்டது.

ஒன்றின்மீது ஒன்று மாறிமாறி வரி விதித்து உலகப் பொருளியலை ஆட்டம்காண வைத்தன.

இருப்பினும் கடந்த சில வாரங்களாக இரு நாடுகளும் வர்த்தகப் பூசலை நிறுத்திவிட்டு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

லண்டனில் நடக்கும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், வர்த்தக அமைச்சர்களான ஹவ்வார்ட் லுட்னிக், ஜேமிசன் கிரீர் கலந்துகொள்வார்கள் என்று அதிபர் டிரம்ப் சமூக ஊடகம் வழி தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின்போது எதுகுறித்து அதிகம் விவாதிக்கப்படும் என்பது தொடர்பான விவரங்களைத் திரு டிரம்ப் வெளியிடவில்லை.

இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நன்றாகச் செல்லும் என்று அவர் குறிப்பிட்டார்.

சீனா தரப்பிலிருந்து யார் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பது குறித்த தகவலும் வெளியிடப்படவில்லை. வா‌ஷிங்டனில் உள்ள சீனத் தூதரகமும் இதுகுறித்து உடனடி தகவல் தர மறுத்துவிட்டது.

அண்மையில் திரு டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் பேசிக்கொண்டனர். அதையடுத்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.

அதிபர் டிரம்ப்பும் அதிபர் ஸியும் விரைவில் நேரில் சந்தித்துப் பேச சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அதுவரை அந்நாடுகளின் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்