பாகிஸ்தானின் பெஷாவரில் துணைத் தூதரகத்தை மூடும் அமெரிக்கா

பாகிஸ்தானின் பெஷாவரில் துணைத் தூதரகத்தை மூடும் அமெரிக்கா

1 mins read
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு நடவடிக்கை
5ef6cb3c-ec30-4e57-b0e4-f203a47c63c0
அண்மையில், கைபர் பாக்துன்குவா மாநிலத்தில் பாகிஸ்தான் படையினருக்கும் ஆப்கானிய ஆதரவுப் போராளிகள் என்று கூறப்படுவோருக்கும் இடையே கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன. - படம்: ராய்ட்டர்ஸ்

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள துணைத் தூதரகத்தை மூடவிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தனது அரசதந்திரிகளின் பாதுகாப்பை முன்னிட்டு அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை (மே 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

அந்தத் துணைத் தூதரகத்தின் அரசதந்திரப் பணிகள் அனைத்தையும் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இனி கையாளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த முடிவு, நாட்டின் அரசதந்திர அதிகாரிகளின் பாதுகாப்பு மீதான நமது கடப்பாட்டையும் வளங்களைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றலையும் காட்டுகிறது,” என்று அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைபர் பாக்துன்குவா மாநிலத்தின் தலைநகரம் பெஷாவர். அந்த மாநிலம் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் படையினர் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டனர். அவர்களுக்கும் ஆப்கானியப் போராளிகளுக்கும் இடையே அங்குப் பலமுறை கடுமையான மோதல்கள் நிகழ்ந்தன.

மார்ச் மாதம் கராச்சியில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் உள்ளே ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த சம்பவத்தில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி ஆகாயத் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து கராச்சியில் அந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

குறிப்புச் சொற்கள்