வாஷிங்டன்: பங்ளாதேஷில் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி, நாட்டை விட்டுத் தப்பியோடிய நிலையில் ராணுவம் ‘சுய கட்டுப்பாட்டுடன்’ நடந்துகொள்வதற்காக அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும், ஜனநாயக வழியில் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) அது வலியுறுத்தியது.
பங்ளாதேஷில் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீட்டை எதிர்த்து நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
ஆர்ப்பாட்டங்கள் நாளடைவில் தீவிரமடைந்து பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி அவர் பதவி விலகி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக, பங்ளாதேஷின் ராணுவத் தலைவர் வேக்கர்-உஸ்- ஸமான், திருவாட்டி ஹசினாவின் பதவி விலகல் குறித்துத் தொலைக்காட்சியில் அறிவித்தார். இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“பங்ளாதேஷில் ஜனநாயக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளது. இடைக்கால அரசாங்கத்தை ஜனநாயக வழியில், அனைவரையும் உள்ளடக்கியதாக அமைக்க வலியுறுத்துகிறோம். ராணுவம் இன்று ‘சுயகட்டுப்பாட்டுடன்’ நடந்துகொண்ட முறைக்குப் பாராட்டு தெரிவிக்கிறோம்,” என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் திங்கட்கிழமை கூறினார்.
வெள்ளை மாளிகையும் அமெரிக்க வெளியுறவு அமைச்சும், சம்பந்தப்பட்ட தரப்பினர் வன்செயல்களைத் தவிர்க்கும்படியும் கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
“இடைக்கால அரசாங்கம் குறித்த அறிவிப்பை வரவேற்கிறோம்,” என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.