ஜெர்மனியில் படையினரைக் குறைக்க அமெரிக்கா பரிசீலனை: டிரம்ப்

ஜெர்மனியில் படையினரைக் குறைக்க அமெரிக்கா பரிசீலனை: டிரம்ப்

2 mins read
811824cd-3373-48c2-a3e7-e40d5a1a31de
ஹோர்முஸ் நீரிணைக்குக் கப்பல்களை அனுப்ப மறுத்ததால் ஜெர்மனியையும் நேட்டோ நாடுகளையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கெனவே குறைகூறியிருந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: ஜெர்மனியில் உள்ள தனது படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்ரல் 29) இந்தத் தகவலை வெளியிட்டார்.

ஹோர்முஸ் நீரிணைக்குக் கப்பல்களை அனுப்ப மறுத்ததால் ஜெர்மனியையும் நேட்டோ நாடுகளையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கெனவே குறைகூறியிருந்தார்.

“ஜெர்மனியில் படையினரின் எண்ணிக்கையைக் குறைப்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. விரைவில் அதுபற்றிய முடிவு எடுக்கப்படும்,” என்று திரு டிரம்ப், ‘ட்ரூத் சோ‌ஷியல்’ சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கப் படையினர் சிலரை அகற்றும் சாத்தியம் குறித்துத் திரு டிரம்ப் விவாதித்திருப்பதாக வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் இம்மாதத் (ஏப்ரல்) தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.

2025 டிசம்பர் நிலவரப்படி, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கத் தளங்களில் 68,000க்கும் மேற்பட்ட ராணுவப் படையினர் பணியில் இருக்கின்றனர். அமெரிக்கத் தற்காப்பு மனிதவளத் தரவு நிலையத்தின் புள்ளிவிவரங்களில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜெர்மனியில் இருக்கின்றனர். 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் அங்கிருந்த 250,000 அமெரிக்கப் படையினருடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவே. அதன்பிறகுதான் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு, கெடுபிடிப் போர் முடிவுக்கு வந்தது.

அண்மைக் காலமாக ஈரானியப் போரின் தொடர்பில் திரு டிரம்ப், ஜெர்மானியப் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்சுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரானியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சில் அமெரிக்காவை ஈரான் அவமானப்படுத்துவதாகத் திரு மெர்ஸ் தெரிவித்தார். ஆனால், அவர் என்ன பேசுகிறார் என்றே ஜெர்மானியப் பிரதமருக்குப் புரியவில்லை என்றார் திரு டிரம்ப்.

ஈரானியப் போர் குறித்த சர்ச்சை தொடரும் நிலையிலும் அமெரிக்க அதிபருடனான உறவு நல்ல நிலையில் இருப்பதாகத் திரு மெர்ஸ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்