ஈரானின் கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றலாம்: டிரம்ப்

ஈரானின் கார்க் தீவை அமெரிக்கா கைப்பற்றலாம்: டிரம்ப்

3 mins read
d0d3699f-4125-4f8f-8512-1141cb5eb2e5
அமெரிக்க அதிபர் டிரம்ப் (இடது), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இருவரும் மார்ச் 20ஆம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினர். - படம்: புளூம்பர்க்

வாஷிங்டன்: பாரசீக வளைகுடாவில் உள்ள ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவை (Kharg Island) அமெரிக்கா கைப்பற்றலாம் என்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தி ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில், “ அமெரிக்கா, கார்க் தீவைக் கைப்பற்றலாம், கைப்பற்றாமலும் போகலாம். நாங்கள் விருப்பப்படி முடிவுசெய்வோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஈரானிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் அதனை எளிதாகக் கைப்பற்றுவோம்,” என்றார் அவர்.

அனைத்துலக நீர்வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் ஏற்றிச் செல்லும் 20 கப்பல்களை அனுமதிக்க ஈரான் அவைத் தலைவர் காலிபாஃப் அனுமதி வழங்கினார் என்றும், இது பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

அமைதிப் பேச்சு நடத்தத் தயார்: பாகிஸ்தான்

இதற்கிடையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தான் நடத்தவுள்ளதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆனால் ஈரான் அவைத் தலைவர் முகமது பாகர் காலிபாஃப் அதை நிராகரித்துள்ளார்.

கிட்டத்தட்ட 2,500 அமெரிக்க கடற்படை வீரர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வந்துள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை ஒரு கண்துடைப்பு என்று அவர் சாடியுள்ளார்.

அமெரிக்கத் தரைப்படை வீரர்கள் வந்தால் அவர்கள்மீது நெருப்பை மழையாகப் பொழிய ஈரானியப் படைகள் காத்திருப்பதாக அந்நாட்டு அவைத் தலைவர் எச்சரித்தார்.

ஞாயிற்றுக்கிழமை ஈரானில் உள்ள முக்கிய இலக்குகளை அமெரிக்கா தாக்கியதாகவும், அதே வேளையில் டெஹ்ரான்மீது புதிய தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலும் தெரிவித்துள்ளது.

லெபனான் கரையோரப் பகுதியான, பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் இஸ்‌ரேல் திங்கட்கிழமை (மார்ச் 30) வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளது.
லெபனான் கரையோரப் பகுதியான, பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் இஸ்‌ரேல் திங்கட்கிழமை (மார்ச் 30) வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளது. - படம்: ஏஎஃப்பி

ஈரான்மீது தரைவழித் தாக்குதலுக்கு அமெரிக்கா பெரும் திட்டம்

ஈரான்மீது ‘ஆபரேஷன் 5ஜி’ என்ற பெரிய அளவிலான தரைவழித் தாக்குதலை நடத்த அமெரிக்கா தீவிரமாகத் தயாராகி வருகிறது.

ஐந்து கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள அந்த நடவடிக்கையில், ஈரானின் கடற்கரையோர ராணுவத் தளங்களை அழித்து, ஹோர்முஸ் நீரிணையில் உள்ள தீவுகளைக் கைப்பற்றி, அந்நாட்டின் உயர்மட்டத் தலைமையைத் தனிமைப்படுத்துவதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம்.

அதேவேளையில் ஈரான் தனது 1,500 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையோரம் அதிநவீன ஏவுகணைகள், கடல் ஆளில்லா வானூர்திகள், கண்ணிவெடிகளை நிலைநிறுத்தியுள்ளதுடன், நிலத்தடி சுரங்கப்பாதைகள், கொரில்லாப் போர் முறைகளைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது.

ஈரானிடம் இன்னும் 70 விழுக்காடு ஏவுகணைகள் கையிருப்பில் உள்ளதால், அமெரிக்காவின் இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் அது மத்திய கிழக்கில் ஒரு மிகப்பெரிய அழிவிற்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

மார்ச் 28ஆம் தேதி நடத்தப்பட ஏவுகணைத் தாக்குதலில் கிழக்கு தெஹ்ரானில் உள்ள வாகன சேவை நிலையம் முற்றாக அழிந்தது.
மார்ச் 28ஆம் தேதி நடத்தப்பட ஏவுகணைத் தாக்குதலில் கிழக்கு தெஹ்ரானில் உள்ள வாகன சேவை நிலையம் முற்றாக அழிந்தது. - படம்: ஏஎஃப்பி

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

உலகப் பொருளியல் பெரும் பாதிப்பு

ஹோர்முஸ் நீரிணை முடங்கி, அனைத்துலக வணிகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115 டாலராக உயர்ந்துள்ளது. உர ஏற்றுமதி பாதிக்கப்படுவதால் உணவுப் பொருள்களின் விலையும் உயரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்போரினால் அனைத்துலகப் பொருளியல் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது.

ஆயிரக்கணக்கானோர் பலி, பல்லாயிரம் பேர் இடப்பெயர்வு

இந்த ஒரு மாத காலப் போரில் ஈரானில் 1,900க்கும் அதிகமானோரும் லெபனானில் 1,200க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.

லெபனானிலும் ஈரானிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது அந்த வட்டாரத்தின் பொருளியல், பாதுகாப்பு நிலையை வெகுவாகப் பாதித்துள்ளதாக அனைத்துலகக் கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நிலைமையைச் சீர்செய்யச் சம்பந்தப்பட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், அடுத்த சில நாள்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

மார்ச் 29ஆம் தேதி தாக்குதலில் இடிந்துவிழுந்து தெஹ்ரானில் உள்ள ஏஐ அராபி செய்தி அலுவலகத்திலிருந்த கணினி சேவையகத்தை எடுத்துச் செல்லும் ஊழியர்கள்.
மார்ச் 29ஆம் தேதி தாக்குதலில் இடிந்துவிழுந்து தெஹ்ரானில் உள்ள ஏஐ அராபி செய்தி அலுவலகத்திலிருந்த கணினி சேவையகத்தை எடுத்துச் செல்லும் ஊழியர்கள். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்