டிரம்ப்பின் வரி விதிப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை

2 mins read
2459c54d-d623-42dd-ba5a-6ef2fd8f2413
திரு டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதித்திருந்தார். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் வரி விதிப்பை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தடை செய்துள்ளது.

அதன்படி திரு டிரம்ப்பின் வரி விதிப்பைச் செயல்படுத்த முடியாது. அமெரிக்காவிடமிருந்து வாங்குவதைவிட அதனிடம் விற்கும் நாடுகள் மீதும் வரி விதித்து திரு டிரம்ப் தமது அதிகாரத்தை மீறி நடந்துகொண்டதாக அந்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

“நிலைமையைச் சமாளிக்க அதிபர் வரி விதிப்பது ஆக்கபூர்வமானதாக இருக்கக்கூடும் என்றோ அறிவார்ந்த செயல் என்றோ இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்று மூன்று நீதிபதிகளைக் கொண்ட அனைத்துலக வர்த்தக நீதிமன்றக் குழு கூறியது. 10 நாள்களுக்குள் தீர்ப்புக்கு இணங்க திரு டிரம்ப்பின் அரசாங்கம் புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும் என்று அந்த நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

தீர்ப்பளிக்கப்பட்டு சில நிமிடங்கள் கழித்து திரு டிரம்ப்பின் அரசாங்கம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம் குறித்தும் அக்குழு கேள்வி எழுப்பியது.

கடந்த ஜனவரி மாதம் முதல் அனைத்துலக அவசரகால பொருளியல் சக்திச் சட்டத்தை (ஐஇஇபிஏ) மையமாகக் கொண்ட, திரு டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லுபடியாகாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த சட்டம், தேசிய அளவில் அவசரகாலம் நிலவும்போது தலைதூக்கும் அசாதாரணமான மிரட்டல்களைக் கையாள்வதற்குரியது.

மேன்ஹேட்டனில் இயங்கும் அனைத்துலக வர்த்தக நீதிமன்றம், அனைத்துலக வர்த்தகம், குடிநுழைவுச் சட்டங்கள் தொடர்பிலான பூசல்கள் குறித்து விசாரணை நடத்தும். அந்த நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிராக அமெரிக்கத் தலைநகர் வா‌ஷிங்டனில் இருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யலாம். இறுதியாக அமெரிக்க உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீட்டு நடவடிக்கைகள் செல்லும்.

அனைத்துலக வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பு நிதிச் சந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தீர்ப்பைத் தொடர்ந்து யூரோ, யென், சுவிட்சாந்து ஃபிராங்க் போன்ற நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு கூடியது.

குறிப்புச் சொற்கள்