தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட்டி விகிதத்தைக் குறைத்த அமெரிக்கா

2 mins read
095b5d1a-2a7c-4bb6-a885-15c78d35bbda
நியூயார்க் பங்குச் சந்தையில் உள்ள தொலைக்காட்சி ஒன்று, செப்டம்பர் 17ஆம் தேதி வட்டி விகிதத்தைக் குறைக்கும் மத்திய வங்கியின் முடிவை ஒளிபரப்புகிறது. - படம்: புளூம்பெர்க்.

வா‌ஷிங்டன்: அமெரிக்க மத்திய வங்கி இந்த ஆண்டில் முதன்முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது.

வட்டி விகிதத்தைக் கால் விழுக்காட்டுப் புள்ளி குறைத்திருப்பதாக மத்திய வங்கி புதன்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்தது. வட்டி விகிதம் 4 விழுக்காட்டுக்கும் 4.25 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று அது கூறியது.

வேலைச் சந்தை வலுவிழந்ததன் அறிகுறியாக வட்டி விகிதக் குறைப்புப் பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மேலும் இரண்டு முறை வட்டி விகிதம் குறைக்கப்படக்கூடும் என்றும் மத்திய வங்கி கோடிகாட்டியுள்ளது.

மத்திய வங்கி, அரசியலிலிருந்து விலகிநின்று சுதந்திரமாய்ச் செயல்பட உறுதியுடன் இருப்பதாக அதன் தலைவர் ஜெரோம் பவல் கூறினார்.

தீர்வைகள், பணவீக்கம், ஊழியர் சந்தை முதலியவை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கின்றன என்பதைப் பார்த்து முடிவெடுக்க வங்கி காத்திருந்தது சரியான முடிவு என்றார் அவர்.

மத்திய வங்கியின் முடிவுக்கு எதிராக அதன் புதிய ஆளுநர் ஸ்டெஃபன் மிரன் மட்டும் வாக்களித்தார். அவர் வட்டி விகிதத்தை அரை விழுக்காட்டுப் புள்ளி குறைப்பதற்கு ஆதரவாக இருந்தார்.

மத்திய திறந்த சந்தைக் குழுவில் அங்கம் வகிக்கும் எஞ்சிய 11 உறுப்பினர்களும் வட்டி விகிதத்தைக் கால் விழுக்காட்டுப் புள்ளி குறைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வரிக் கொள்கைகளால் சில பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஆயினும் பொருளியல் நடவடிக்கை, பணவீக்கம் ஆகியவற்றில் ஏற்படக்கூடிய ஒட்டுமொத்தத் தாக்கத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார் திரு பவல்.

வேலைச் சந்தை குறித்தும் அவர் பேசினார். புதிய ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருப்பதாகத் திரு பவல் சொன்னார். அதற்கு முக்கியக் காரணம், தீர்வைகள் அல்ல என்றும் அமெரிக்காவில் குடிபுகுவோர் எண்ணிக்கை குறைந்திருப்பதே என்றும் அவர் விவரித்தார்.

2025ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பை மத்திய வங்கி 1.6 விழுக்காட்டுக்கு மேல்நோக்கித் திருத்தியுள்ளது.

ஜூன் மாதம் முன்னுரைக்கப்பட்ட 1.4 விழுக்காட்டு வளர்ச்சியைவிட அது அதிகம்.

குறிப்புச் சொற்கள்