தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராணுவப் படை வைத்திருப்பது உக்ரேன் உரிமை: அமெரிக்கா

2 mins read
6af1d90c-9817-4ec5-bdfb-a5ce1bd7d02a
உக்ரேன் ராணுவப் படைகளின் இளம் வீரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: தன்னைத் தாற்காத்துக்கொள்ள போதுமான வசதிகளைக் கொண்ட ராணுவத்தையும் தற்காப்புத் திறனையும் வளர்த்துக்கொள்ளும் உரிமை உக்ரேனுக்கு உள்ளது என்பதை ர‌ஷ்யா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிடும் என்று தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

அமைதி ஒப்பந்தம் ஒன்றின்கீழ் அமெரிக்கா, அந்த நிபந்தனையை முன்வைக்கும் என்று தகவல் அறிந்தோர் குறிப்பிட்டுள்ளனர். உக்ரேன் அதன் ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட வேண்டும் என்று ர‌ஷ்யா தொடர்ந்து கூறிவந்துள்ளது.

இதுகுறித்து ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், ர‌ஷ்யா செல்வார் என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர். தகவல் அறிந்தவர்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

இது, உக்ரேன் போர் தொடர்பில் உக்ரேன் மட்டுமின்றி ர‌ஷ்யாவும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எதிர்பார்ப்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. 2022ஆம் அண்டு தொடங்கிய உக்ரேன் போர் இப்போது நான்காவது ஆண்டாகத் தொடர்கிறது.

போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகள் ரஷ்யாவுக்கு சற்று சாதகமாக இருந்தன என்பது விமர்சகர்களின் கருத்தாக இருந்து வந்தது. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் சேர வேண்டும் என்ற எண்ணத்தை உக்ரேன் கைவிடவேண்டும் என்று திரு டிரம்ப் வலியுறுத்தி வருவது அதை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.

போர் மூலம் உக்ரேனை அதன் ராணுவ நடவடிக்கைகளை மொத்தமாகக் கைவிடவைப்பது திரு புட்டினின் இலக்குகளில் ஒன்று. அந்த வகையில், உக்ரேனின் ராணுவ உரிமையை ரஷ்யா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா நிபந்தனை விதித்தால் திரு புட்டின் அந்த இலக்கைக் கைவிட வேண்டியிருக்கும்.

வருங்காலத்தில் தனது ராணுவப் படைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை உக்ரேன் சுயமாக முடிவெடுப்பதற்கு அனுமதிக்க ர‌ஷ்யா எவ்வளவு தூரம் தயாராய் இருக்கிறது என்பதைப் பொறத்தே இந்த விவகாரத்தின் தொடர்பில் என்ன நடக்கும் என்பது தெரியவரும்.

குறிப்புச் சொற்கள்