அமெரிக்காவின் வருங்காலத்தை மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் நவம்பர் 5ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
சனிக்கிழமை அன்று தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூடிய முக்கிய மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலைனாவில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான துணை அதிபர் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்பும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரபூர்வ துணை அதிபருக்கான விமானப் படையின் விமானத்தில் ஹாரிஸ் வடக்கு கரோலைனாவின் சார்லோட் விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரது விமானத்திற்கு அருகே டோனல்ட் டிரம்ப்பின் தனிப்பட்ட ஜெட் விமானமும் நிறுத்தப்பட்டது.
இருவரும் தங்களுடைய பேரணிகளில் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு இறுதி வேண்டுகோள்களை விடுத்தனர்.
ஹாரிசின் பேரணியில் ஜான் போன் ஜோவி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது தனது ஆதரவாளர்களிடம் பேசிய கமலா ஹாரிஸ், அதிபராக உங்கள் சார்பாகப் போராடுவேன் என்று முழங்கினார்.
இதே மாநிலத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், பணவீக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகச் சூளுரைத்தார்.
அமெரிக்கா ‘தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட நாடாக இருக்கிறது, நவம்பர் 5ஆம் தேதி தேர்தலுக்குப் பிறகு விடுதலை பெற்ற நாடாக இருக்கும்’ என்று அவர் குறிப்பிட்டார்.
நவம்பர் 2ஆம் தேதி மாலை நிலவரப்படி அதிபர் தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் போர்க்களமான ஏழு மாநிலங்களில் எந்த ஒரு வேட்பாளரும் மூன்று புள்ளிகளுக்கு மேல் முன்னிலை வகிக்கவில்லை என்று ரெட்கிளியர்பாலிடிக்ஸ் (RealClearPolitics) ஆய்வு தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் 78 வயதான டோனல்ட் டிரம்பும் 60 வயதான ஹாரிசும் ஒருவருக்கொருவர் குறுகிய வித்தியாசத்திலேயே இருப்பதையே காட்டுகின்றன.
கமலா ஹாரிசுக்கு டெய்லர் சுவிஃப்ட் உட்பட பல நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் டோனட்ல்ட் டிரம்புக்கு உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தத் தேர்தலில் பொருளியல் முக்கிய இடம்பிடித்துள்ளது. கருக்கலைப்பு விவகாரம், வேலை வாய்ப்பு, சட்டவிரோதக் குடியேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கும் வாக்காளர்கள் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.
திருவாட்டி ஹாரிஸ், அடுத்த கட்டமாக தமது ஜனநாயகக் கட்சியின் வெற்றிக்கு முக்கியமாகக் கருதப்படும் அமெரிக்க-கனடா எல்லையில் கிரேட் லேக்ஸ் எனப்படும் பெரிய ஏரி பரவியிருக்கும் மாநிலங்களில் கவனம் செலுத்தவிருக்கிறார். அந்த வகையில் நவம்பர் 3ஆம் தேதி மிச்சிகனில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். அந்த மாநிலத்தில் உள்ள டெட்ராய்டில் தொடங்கி அன்று மாலை மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.
டிரம்பின் நவம்பர் 3ஆம் தேதி பிரசார அட்டவணை, பென்சில்வேனியா, வடக்கு கரோலைனா மற்றும் ஜார்ஜியாவை மையமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே 75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர் என்று ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் தேர்தல் ஆய்வுகூடம் தெரிவித்துள்ளது.
கமலா ஹாரிஸ், டோனல்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுவதால் இம்முறை அதிபர் தேர்தலை ‘ஸ்விங்’ எனப்படும் வெற்றியை நிர்ணயிக்கும் மாநிலங்கள் முடிவுகளை தீர்மானிக்கும் என்று அமெரிக்க தேர்தல் மற்றும் கருத்துக்கணிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.