அமெரிக்கா அதன் 250ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை ஜூலை 4ஆம் தேதி உலகெங்கிலும் கொண்டாடவுள்ளது.
அதனையொட்டி இங்குள்ள வர்த்தக நிறுவனங்களிடம் நன்கொடை வழங்கும்படியான கோரிக்கைக் கடிதம் ஒன்றை சிங்கப்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூருக்கான அமெரிக்கத் தூதரால் கையொப்பமிடப்பட்டுள்ள அக்கடிதம், முந்தைய ஆண்டைவிட பெரிய அளவிலான நன்கொடைகளைப் பரிசீலனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதை இணையத்தில் பார்த்த சிலர் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.
இவ்வாண்டின் 250ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் வெள்ளை மாளிகையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். வரும் ஏப்ரல் 4ஆம் தேதி, சிங்கப்பூருடனான அரசதந்திர உறவு தொடங்கப்பட்டதன் 40ஆம் ஆண்டு நிறைவையும் தூதரகம் பெருமையுடன் நினைவுகொள்கிறது.
இந்த இரு முக்கிய நிகழ்வுகளை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழும் விதமாக சிங்கப்பூரில் இயங்கும் பங்காளித்துவ நிறுவனங்களும் வர்த்தகங்களும் வழக்கத்தைவிட பெரிய அளவில் நன்கொடைகள் வழங்குமாறு அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
“எங்களது கொண்டாட்டங்கள், அமெரிக்க, சிங்கப்பூர் நிறுவனங்களின் பெருந்தன்மையைப் பொறுத்து அமையும். இருநாடுகளின் மேன்மையான, பெருமை நிறைந்த உறவையும் வரலாற்றையும் பகிர்ந்து எதிர்கால வாய்ப்புகளைக் கட்டமைக்க உங்களது நிதி நன்கொடைகள் ஊக்கமளிக்கும்,” என்று கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் ஒரு ஃபேஸ்புக் பயனாளர், பல வெளிநாட்டுத் தூதரகங்கள் நன்கொடை கேட்டுப் பதிவிடுவது வழக்கமான ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கருத்துரைத்த அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர், இது உலகெங்கிலும் உள்ள ஒவ்வோர் அமெரிக்கத் தூதரகத்தின் நடைமுறைகளுக்கு ஏற்புடையது என்று கூறினார். எனவே, ஆண்டுதோறும் மேற்கொள்ளும் நன்கொடை நடவடிக்கைகளையே சிங்கப்பூரிலும் செய்துள்ளதாக அவர் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“அமெரிக்க வரலாற்றில் முக்கிய நிகழ்வான 250ஆம் ஆண்டு நிறைவை வெகுசிறப்பாகக் கொண்டாட நாங்கள் திட்டமிட்டு, தனியார் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

