பெய்ஜிங்: சீனாவும் அமெரிக்காவும் அவற்றின் சிக்கலான அரசதந்திர உறவை மாற்றியமைக்க, பருவநிலை ஒத்துழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அமெரிக்காவின் பருவநிலைத் தூதர் ஜான் கேரி, சீனாவின் அரசதந்திரி வாங் யிடம் கூறினார்.
உலகில் வெப்பநிலை அதிகரிப்பைச் சமாளிப்பதற்கான நடவடிக்கையை ஒன்றிணைந்து வழிநடத்த இது உதவும் என்றார் அவர்.
அந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால், அது ஒரு புதிய தொடக்கமாக அமையலாம் என்று திரு வாங்கிடம் திரு கேரி கூறினார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஆற்றலுக்கும் ஒத்துழைப்புக்கும் இது ஒரு தொடக்கமாக அமையலாம் என்பதைத் தாங்கள் நம்புவதாகவும் திரு கேரி கூறினார்.
“திரு கேரி தமது பழைய நண்பர்,” என்று கூறிய திரு வாங், இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட தொடர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஈரான் அணுசக்திப் பேச்சுகள் உள்ளிட்ட கடந்தகாலப் பணிகளை அவர் சுட்டினார்.
இதற்கிடையே, சீனாவின் பருவநிலை மாற்றத்திற்கான சிறப்புத் தூதர் சியே ஸென்ஹுவாவையும் திரு கேரி, பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்தது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க, சீன நாடுகளின் பருவநிலைத் தூதர்களின் கடின உழைப்பை திரு வாங் பாராட்டியுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.

