வாஷிங்டன்: புதன்கிழமையன்று (அக்டோபர் 1) அமெரிக்க அரசாங்கம் முடக்கநிலையைத் தொடங்குகிறது.
நாடாளுமன்றத்தில் ஒரு சுமுகமான முடிவு எட்டப்படாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கூட்டரசு சேவைகளுக்கு இது இடையூறு விளைவிக்கும்.
இதனால் ஊழியர்கள் பலர் பாதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் நாடு தழுவிய முடக்கநிலை என்பது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டில் அமெரிக்க அரசாங்கத்தின் சில துறைகள் இயங்குவதை 35 நாள்களுக்கு நிறுத்திக்கொண்டன.
இம்முறை, காலாவதியாகும் சுகாதாரப் பராமரிப்பு மானியங்களை நீட்டிக்க வேண்டும் என்று ஐனநாயகக் கட்சியினர் கேட்டுக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால் அதை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜனநாயகக் கட்சியினர் கேட்டுக்கொண்ட பல திட்டங்களை ஆளும் குடியரசுக் கட்சி ஏற்கவில்லை.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் குடியரசுக் கட்சியின் கையோங்கியது.
இதன்மூலம் அக்டோபர் மாத இறுதி வரை நிதி வழங்குவதை நீட்டிப்பதற்கான ஜனநாயகக் கட்சியின் திட்டத்தை அது தடுத்து நிறுத்தியது.
வாக்கெடுப்புக்குப் பிறகு முடக்கநிலை முறையான வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் வரவுசெலவுத் திட்ட இயக்குநர் திரு ரசல் வோட் உத்தரவிட்டார்.
முடக்கநிலையைத் தடுக்க குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை.
மாறாக, இருதரப்பினரும் ஒருவரையொருவர் குறைகூறிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முடக்கநிலை பல நன்மைகளைத் தரக்கூடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கூட்டரசு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யலாம் என்றார் அவர்.