வாஷிங்டன்: அடுத்த அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவுடன் வரையப்பட்ட செலவினத் திட்டத்துக்கு அந்நாட்டுப் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கவில்லை.
அதன் காரணமாக அமெரிக்க அரசாங்கத் துறை முடங்கும் விளிம்பில் உள்ளது.
திரு டிரம்ப்பின் ஆதரவுடன் வரையப்பட்ட செலவினத் திட்டத்தை அவரின் குடியரசுக் கட்சியினர் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அரசாங்கத் துறை முடங்குவதைத் தடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்திடம் தெளிவான திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத் துறை முடங்கிப்போனால் அது கிறிஸ்துமஸ் காலத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்களில் இடையூறு விளைவிக்கக்கூடும்.
செலவினத் திட்டத்துக்கு பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் வழங்கப்படாதது குடியரசுக் கட்சியில் இருக்கும் விரிசல்களைக் காட்டுவதாக நம்பப்படுகிறது. வெள்ளை மாளிகை, இரு காங்கிரஸ் அவைகள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கவுள்ள நிலையில் அடுத்த ஆண்டு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி தாம் அதிபராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு குறைபாடுகளை சரிசெய்யுமாறு திரு டிரம்ப், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் குரல் கொடுத்திருந்தார்.
ஆனால், குடியரசுக் கட்சியின் ஒருசாரார் அவரின் ஆதரவுடன் வரையப்பட்ட செலவினத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.
அந்தத் திட்டம், செலவை அதிகரித்து மத்திய அரசாங்கம் சுமக்கும் 36 டிரில்லியன் டாலர் (49.02 டிரில்லியன் வெள்ளி) கடனை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அந்த செலவினத் திட்டத்துக்குச் சாதகமாக 174 நாடாளுமன்ற வாக்குகள் சேர்ந்தன. அதை எதிர்த்து 235 வாக்குகள் பதிவாயின.
திட்டத்துக்கான வாக்கெடுப்பு, சில மணிநேரத்தில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
செலவினத் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்காததைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி குடியரசுக் கட்சி சபாநாயகர் மைக் ஜான்சன், செய்தியாளர்களிடம் மேல்விவரம் ஏதும் வழங்கவில்லை.
வேறு தீர்வு வரையப்படும் என்று அவர் சொன்னார்.
அரசாங்கம் நிதி வழங்க வழிவகுக்கும் திட்டம் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) நள்ளிரவு 12 மணிக்கு நிறைவடையவுள்ளது.