வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அரசாங்கம், அந்நாட்டு குடிநுழைவுத் துறையின் அமலாக்க நடவடிக்கைகளுக்கு உதவ இயந்திரத்தில் இயங்கும் ரோபோ நாய்களை பயன்டுத்த திட்டமிடுகின்றனர்.
அதனைக்கொண்டு கள்ளக்குடியேறிகளைக் கைது செய்யவும் நாடுகடத்தவும் அவர்கள் முனைவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதற்கு S$25.5 மில்லியன் (US$20 மில்லியன்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் குடிநுழைவு, சுங்கத்துறை அமலாக்கப் பிரிவு வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 28) அதற்கான ஆய்வுகளை நடத்த ஒப்பந்தப்புள்ளைகளைக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அந்த அமைப்பு நான்கு கால்களுடன் இயங்கக்கூடிய வாகனங்கள் என்று அழைக்கப்படும் ‘ரோபோடிக்’ நாய்களை வாங்குவதற்கான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கான தொழில்நுட்ப வரயறைகளும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டன.
பற்பல சமூக மனித உரிமைக் குழுக்கள் அமெரிக்கக் குடிநுழைவுத் துறையினர் பலரை பலவந்தமாகக் கையாள்வதையும் வன்முறையைப் பயன்படுத்துவதையும் கண்டித்துவரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு, அதிபர் டிரம்ப் குடிநுழைவுத் துறைக்கென நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதையும் அக்குழுக்கள் வரவேற்கவில்லை.
அமலாக்கத்துறையின் தொழில்நுட்ப செயல்பாட்டை மேம்படுத்த அதிகாரிகள் ஒருவரைத் தொட்டதும் அதிர்ச்சியூட்டும் மின்அதிர்வுகள் தரக்கூடிய கையுறைகளை வாங்குவதும் அதிக நிதி ஒதுக்கீட்டுக்கான காரணம் என்று அத்துறை தெரிவித்துள்ளது. அத்திட்டத்திற்கு S$25.5 மில்லியன் (US$20 மில்லியன்) தேவைப்படலாம்.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதுகுறித்து எவ்வித கருத்தையும் ஊடகத்திடம் வெளியிடவில்லை.


