வாஷிங்டன்: வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா வியாழக்கிழமை (டிசம்பர் 11) புதிய தடைகளை விதித்துள்ளது.
வெனிசுவேலாவின் அதிபர் நிக்கலஸ் மடுரோவின் மனைவியினுடைய உறவினர்கள் மூவருக்கு எதிராகத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றோடு, அவர்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஆறு கச்சா எண்ணெய்க் கப்பல்கள் மீதும் கப்பல் நிறுவனங்கள் மீதும் அமெரிக்க நிதி அமைச்சு தடைகளை விதித்தது.
கராக்கசின்மீது நெருக்குதலை அதிகரிக்கும் வகையில் வாஷிங்டனின் அண்மைத் தடைகள் அமைந்துள்ளன.
கரீபிய வட்டாரத்தின் தென்பகுதியில் பெரிய அளவில் அமெரிக்கா ராணுவத்தைக் குவித்துவருகிறது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திரு மடுரோவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
தடைகள் அறிவிக்கப்பட்ட ஆறு கப்பல்களில் நான்கு பனாமாவுக்குச் சொந்தமானவை. ஒன்று குக் தீவுகளிலும் மற்றொன்று ஹாங்காங்கிலும் பதிவு செய்யப்பட்டவை என்று நம்பப்படுகிறது.
வெனிசுவேலா கடற்கரைக்கு அப்பால் எண்ணெய்க் கப்பலொன்றைக் கைப்பற்றியதாகத் திரு டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார். அந்நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பலைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டது அதுவே முதன்முறை என்று கூறப்பட்டது. 2019ஆம் ஆண்டிலிருந்தே வெனிசுவேலாவுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் நடப்பில் உள்ளன.
அமெரிக்காவுக்குள் அந்நாடு போதைப்பொருள்களை அனுப்புவதாகக் குற்றஞ்சாட்டுகிறார் திரு டிரம்ப். ராணுவத் தலையீடு பற்றிய சாத்தியம் குறித்து அவர் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
போதைப்பொருள்களைக் கடத்தியதாகச் சந்தேகிக்கப்பட்ட கப்பல்கள்மீது அமெரிக்கா இதற்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது.

