வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம், அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்த வரி விதிப்புகளுக்கு மாற்றாக, புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதற்கான முதற்கட்ட வர்த்தக விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.
பல முக்கியப் பொருளியல் நாடுகளின் மீது சட்டப் பிரிவு 301ன் விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் புதன்கிழமை (மார்ச் 11) அறிவித்தார்.
அதிகப்படியான உற்பத்தித் திறன், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்து இந்த விசாரணை கவனம் செலுத்தும். இதன் மூலம் அதிபர் தன்னிச்சையாக குறிப்பிட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு வரி விதிக்க முடியும்.
சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, சீனா, வியட்னாம், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனீசியா, பங்ளாதேஷ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, ஜப்பான், தென் கொரியா, தைவான் உள்ளிட்ட பல நாடுகள் இந்த வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் டிரம்ப் விதித்த புதிய வரிகள் ஜூலை மாதத்துடன் காலாவதியாகும். அதற்குள், இந்த விசாரணை முடிறுவும் எனத் தாம் நம்புவதாக கிரீர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை, நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் எந்தவொரு நாட்டின் பொருள்கள் மீதும் அமெரிக்கா இறக்குமதி வரி விதிக்க அனுமதிக்கப்படும்.
சந்தைத் தேவையைவிட அதிகமாக உற்பத்தித் திறனை சில நாடுகள் வளர்த்துள்ளதாக கிரீர் குற்றம் சாட்டியுள்ளார். பிப்ரவரி மாதம் டிரம்ப்பின் உலகளாவிய வரி விதிப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குப் பிறகு, தனது ‘வரிச் சுவரை’ மீண்டும் கட்டியெழுப்பும் டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய பங்காளியான கனடா, இந்த விசாரணையின் இலக்காக குறிப்பிடப்படவில்லை.

