வாஷிங்டன்: சீனாவுடனான செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் ஏதாகிலும் ஒரு பக்கத்தைத் தெரிவுசெய்யும்படி பல்வேறு நாடுகளிடம் கூற அமெரிக்கா தயாராகிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பில் இணையும் நாடுகள் அமெரிக்கா வழிநடத்தும் செயற்கை நுண்ணறிவுக் கூட்டமைப்பிலிருந்து விலக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்படவிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பார்வையிட்ட உள்வட்ட வரைவுக் கடிதம் ஒன்றும் அதைக் குறிப்பிட்டது.
அமெரிக்கா, கடந்த ஆண்டு பெக்ஸ் சிலிக்கா திட்டத்தை அறிமுகம் செய்தது. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், பகுதி மின்கடத்திகள், முக்கிய தாதுப் பொருள்கள் ஆகியவற்றின் விநியோகத் தொடர்களை உறுதிப்படுத்துவதில் அந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
அமெரிக்காவின் அந்தத் திட்டத்தில் முக்கியத் தாதுப் பொருள்களின் மூலமாகத் திகழும் கஸக்ஸ்தான் உட்பட அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா ஆகியவை இணைந்தன.
ஆனால், கஸக்ஸ்தான் சீனாவின் கூட்டமைப்பிலும் இணைந்துள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு வாய்ப்பு அறிக்கையில் கடந்த ஜூன் மாதம் கையெழுத்திட்ட 35 நாடுகளைக் குறிவைத்து அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சு வரைவுக் கடிதத்தைத் தயாரித்தது.
செயற்கை நுண்ணறிவுப் போட்டாப்போட்டியில் ஏதாகிலும் ஒரு பக்கத்தைத் தெரிவுசெய்யும்படி நாடுகளை நெருக்குவதன் மூலம் அதிநவீன செயற்கை நுண்ணறிவை உருவாக்க முற்படும் சீனாவுக்கான வளங்களை அமெரிக்கா முடக்க திட்டமிடுகிறது.
சீனா அந்தச் செயற்கை நுண்ணறிவை ராணுவத்துக்கோ பொருளியல் ஆதிக்கத்துக்கோ பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்கா சொன்னது.
ஜூலை மாதம், சீன அதிபர் ஸி ஜின்பிங், உலக செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு அமைப்பை அறிமுகம் செய்தார்.
அந்த அமைப்பிலும் அமெரிக்காவின் திட்டத்திலும் தற்போதைக்கு கால்வைத்துள்ள ஒரே நாடு கஸக்ஸ்தான்.
பேக்ஸ் சிலிக்கா தீர்மானத்தில் கையெழுத்திடுவது வெறும் உறுப்பினராகச் சேர்வதற்கானது மட்டுமல்ல. அது ஒரு கடப்பாடு என்று அமெரிக்கா வலியுறுத்தியது.


