மணிலா: அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றின் தற்காப்புப் படைகள் ஏப்ரல் 7ஆம் தேதி கடல்சார் ஒத்துழைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றன.
நீர்வழியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், தடையற்ற, வெளிப்படையான இந்தோ-பசிஃபிக்கிற்கு ஆதரவு வழங்குவதே நோக்கம் என்று அந்நாடுகள் சனிக்கிழமையன்று (ஏப்ரல் 6) கூறின.
தென்சீனக் கடலில் உள்ள மணிலாவின் பொருளியல் பகுதியில் நடமாட்டம், தொடர்பு நடவடிக்கைகள் ஆகியவை, ஒருநாள் கடல்சார்ந்த பயிற்சிகளில் இடம்பெறும் என்று பிலிப்பீன்ஸ் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் ஆர்செனியோ அன்டொலொங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை நாடுகளுக்கு இடையிலான ஆயுதப் படைகளின் உத்திகள், செயல்முறைகள் போன்றவற்றை வலுப்படுத்தும் என்று கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் கடல்சார்ந்த நடவடிக்கை, ஜப்பான், அமெரிக்கா, பிலிப்பீன்ஸ் நாடுகளின் தலைவர்களுக்கு இடையே நடைபெறவிருக்கும் மாநாடு ஒன்றுக்குச் சில நாள்கள் முன்னர் இடம்பெறுகிறது.
அந்த மாநாட்டில், தென் சீனக் கடல்பகுதியில் அண்மையில் நடந்த விவகாரங்கள் குறித்து கலந்துபேசப்படும்.

