வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்றும் நோக்கில் அமெரிக்காவும் ஈரானும் வளைகுடா பகுதியில் புதிய தாக்குதல்களைத் திங்கட்கிழமை (மே 4) தொடங்கின.
இதனால், அப்பகுதியில் நடப்பில் இருந்த போர் நிறுத்தம் சற்று ஆட்டம் கண்டுள்ளது.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பிப்ரவரி மாதம் தாக்குதல்களைத் தொடங்கின. அதிலிருந்து உலகளாவிய முக்கிய எரிசக்தி வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது.
இந்தப் போரின் காரணமாக அவ்வட்டாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வளைகுடா பகுதியில் சிக்கித் தவிக்கும் எண்ணெய்க் கப்பல்களையும் பிற கப்பல்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய முயற்சியைக் கையில் எடுத்தார்.
அதனையடுத்து, இந்தப் புதிய ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதல்கள் அரங்கேறியுள்ளன.
மே 24ஆம் தேதி, வளைகுடாவில் உள்ள பல வர்த்தகக் கப்பல்களில் வெடிப்புகள் அல்லது தீ விபத்துகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
ஈரானின் ஏழு சிறிய ராணுவப் படகுகளை அழித்துவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க ராணுவத் தளம் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் எண்ணெய்த் துறைமுகம் ஒன்றை ஈரானிய ஏவுகணைகள் தீக்கிரையாக்கியதாகவும் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஏழு சிறிய ஈரானியப் படகுகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அதிபர் டிரம்ப் தமது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
வளைகுடா வட்டாரத்தில் சிக்கித் தவிக்கும் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல உதவுவதற்காகத் தாம் மேற்கொள்ளும் ‘பிரொஜெக்ட் ஃபிரீடம்’ (project freedom) என்ற புதிய முயற்சியைப் பற்றிச் சமூக ஊடகங்களில் அறிவித்த திரு டிரம்ப், அது குறித்த மிகக் குறைவான விவரங்களையே வெளியிட்டார்.
நாடாளுமன்றத்திடமிருந்து போருக்காக ஒப்புதல் பெறுவதற்கு அமெரிக்கச் சட்டத்தின்கீழ் அவருக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு முடிவடைந்து இரு நாள்களுக்குப் பிறகு அவர் இதனை அறிவித்தார்.
போர் நிறுத்தப்பட்டதால் காலக்கெடுவுக்கு இனி அவசியமில்லை என்றும் திரு டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்திடம் தெரிவித்தார். ஆனால், அவரின் அக்கூற்றில் உண்மைத் தன்மையில்லை என உறுப்பினர்கள் சிலர் வாதிட்டனர்.
மே 4ஆம் தேதி நடந்த தாக்குதல்கள், நெருக்கடிக்கு ராணுவ ரீதியான தீர்வு ஏதும் இல்லை என்பதைக் காட்டுவதாக ஈரானிய வெளியுவு அமைச்சர் அபாஸ் அராக்சி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தலைமையில் நடந்துவரும் அமைதிப் பேச்சில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவித்த அவர், தீய எண்ணம் கொண்டவர்களால் உருவாக்கப்படும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அமெரிக்காவையும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளையும் கேட்டுக்கொண்டார்.
மேலும், ‘பிரொஜெக்ட் ஃபிரீடம்’ என்பது ஒரு முட்டுக்கட்டைத் திட்டம் எனத் தமது சமூக ஊடகப் பதிவில் அவர் கடுமையாகச் சாடினார்.

