தட்டம்மையை ஒழித்த நாடு என்ற நிலையை இழந்தது அமெரிக்கா

தட்டம்மையை ஒழித்த நாடு என்ற நிலையை இழந்தது அமெரிக்கா

படம்: ராய்ட்டர்ஸ்

14 Nov 2026 - 5:04 pm

1 mins read

வா‌ஷிங்டன்: தட்டம்மையை ஒழித்த நாடு என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா இழந்துவிட்டதாக, அடையாளம் தெரிவிக்கப்படாத தகவல் தெரிந்தவர்களை மேற்கோள்காட்டி வால் ஸ்திரீட் ஜர்னல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக தட்டம்மைப் பரவல் தொடர்வதாலும் வரலாறு காணாத அளவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகிவருவதாலும் இந்நிலை உருவாகியுள்ளது. தட்டம்மையை ஒழித்த நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு நீண்டகாலமாக இருந்துவந்தது.

முழு அமெரிக்கச் சுகாதார அமைப்பு (பாஹோ) மேற்கொண்ட பரிசீலனை நடவடிக்கையைத் தொடர்ந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாஹோ, நோய்க் கிருமித்தொற்று அழிக்கப்படுகிறதா என்பதை ஆராயும் அமைப்பாகும்.

ஒருவகையான தட்டம்மைக் கிருமிப் பரவல் 12 மாதங்களுக்குச் சமூகத்தில் காணப்படுகிறதா என்பதை பாஹோ கணிக்கிறது. அந்த வகையில், யூட்டா மாநிலத்தில் 700க்கும் அதிகமானோர் தட்டம்மைத் தொற்றுக்கு ஆளாகிவிட்டனர். அது, தட்டம்மையை அழித்த நாடு என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா இழந்துவிட்டது என்று முடிவெடுக்கப் போதுமானதாகும்.

இது வெறும் நிலைப்பாடுதான் என்றாலும் இது, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவக்கூடிய நோயைத் தேசிய அளவில் கட்டுப்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது என்பதைக் குறிப்பதாகும்.

இதனால் மற்ற நாடுகள் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் எச்சரிக்கைகளை விடுக்கக்கூடும். மேலும், அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வதையொட்டித் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அறிவுரைகளையும் இதர நாடுகள் வழங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்