வாஷிங்டன்: மேற்கு ஏமனில் உள்ள ராஸ் ஈசா எரிபொருள் துறைமுகத்தின்மீது அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக ஹூதி இயக்கத்தால் நடத்தப்படும் ஊடகம் தெரிவித்தது.
ஈரான் ஆதரவைக் கொண்ட ஹூதி இயக்கத்தின்மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, ஒரே நாளில் இத்தனை பேர் கொல்லப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
இத்தாக்குதல்களில் 102 பேர் காயமுற்றதாகவும் அல் மசிரா தொலைக்காட்சி தெரிவித்தது. ஹூதி இயக்கத்துக்கான எரிபொருளின் ஒரு பகுதியைத் துண்டிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் விளக்கியது.
2023 நவம்பர் முதல், நீரிணையில் செல்லும் பல கப்பல்கள்மீது ஹூதி படையினர் ஆளில்லா வானூர்திகளையும் ஏவுகணைகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். காஸா போர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களைத் தாங்கள் குறிவைத்ததாக ஹூதி படையினர் கூறினர்.
காஸாவில் இரண்டு மாத சண்டைநிறுத்தத்தின்போது கப்பல் தடங்கள்மீதான தாக்குதல்களை ஹூதி நிறுத்திக்கொண்டது.
காஸாவில் மார்ச் மாதம் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்ந்த நிலையில், தானும் தாக்குதல்களைத் தொடரப்போவதாக ஹூதி சூளுரைத்திருந்தாலும், அவற்றில் எதற்கும் அந்த இயக்கம் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்க அதிபராக டோனல்ட் டிரம்ப் ஜனவரியில் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆகப்பெரிய ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹூதி படையினர்மீது அது நடத்திய வான்வழித் தாக்குதல்களில் வியாழக்கிழமை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையே ஆக அதிகமான ஒன்று.