தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனாவுக்கு வேவு பார்த்த விவகாரம்: அமெரிக்கக் கடலோடி குற்றவாளி எனத் தீர்ப்பு

2 mins read
c89724b0-a9bb-4377-9aae-c3b4049d76ae
பேட்ரிக் வெய் என்றும் அழைக்கப்படும் வெய், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுஎஸ்எஸ் எசெக்ஸ் (USS Essex) கப்பலில் வேலை செய்யச் சென்றபோது கைதுசெய்யப்பட்டார்.  - படம்: அமெரிக்க நீதித் துறை

சாண்டியாகோ: கலிஃபோர்னியாவில் உள்ள அமெரிக்கக் கடற்படையின் கடலோடி ஒருவர் சீனாவுக்கு வேவு பார்த்த விவகாரத்தில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சீன முகவர் ஒருவருக்கு அமெரிக்கக் கடற்படையின் ரகசியத் தகவல்களை விற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 25 வயது ஜின்சாவ் வெய், குற்றவாளி என்பது உறுதிசெய்யப்பட்டது.

சமூக ஊடகத்தின் மூலம் சீன முகவர் வெய்யை வேலைக்கு அமர்த்தினார்.

வேவு பார்த்தது, அதற்காகச் சூழ்ச்சி செய்தது, அமெரிக்கக் கடற்படைக் கப்பல்கள் குறித்த ரகசியத் தரவுகளைச் சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாட்டுக்கு அனுப்பியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் வெய் மீது சுமத்தப்பட்டன.

அமெரிக்க ராணுவத்தின் உறுப்பினர் என்ற முறையில் அவர் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் வெய் நடந்துகொண்டதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் அறிக்கையொன்றில் தெரிவித்தார்.

பணத்துக்காகச் சீனாவுக்கு ராணுவ ரகசியங்களை விற்றதன் மூலம் சக கடலோடிகளின் உயிர்களை மட்டும் ஆபத்துக்கு ஆளாக்கவில்லை, அமெரிக்கா, அதன் நட்புநாடுகள் ஆகியவற்றின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பையும் அவர் ஆபத்துக்கு உள்ளாக்கியதாக வழக்கறிஞர் கூறினார்.

பேட்ரிக் வெய் என்றும் அழைக்கப்படும் வெய், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுஎஸ்எஸ் எசெக்ஸ் (USS Essex) கப்பலில் வேலை செய்யச் சென்றபோது கைதுசெய்யப்பட்டார்.

ஒரு வாரம் நீடித்த வழக்கு விசாரணையின்போது வெய் சீனாவைச் சேர்ந்த ஒருவருடன் பரிமாறிக்கொண்ட பல தொலைபேசி உரையாடல்கள், மின்னணுத் தகவல்கள், ஒலித் தகவல்கள் முதலியவற்றை அரசாங்க வழக்கறிஞர்கள் ஆதாரங்களாக முன்வைத்தனர்.

கப்பலில் இயந்திரங்களைக் கையாண்ட வெய்க்கு ரகசியத் தகவல்களைத் தெரிந்துகொள்ள அனுமதி இருந்தது.

சீனாவில் இருப்பவரைப் ‘பெரிய சகோதரர் ஏண்டி’ என்றுதான் வெய் அழைப்பார். பல செயலிகள் மூலம் இருவரும் தொடர்பில் இருந்தனர்.

வெய் ரகசியத் தகவல்களைத் தெரிந்தே கசியவிட்டார் என்பதற்கான ஆதாரமும் முன்வைக்கப்பட்டது.

“அமெரிக்கக் கடற்படையில் இருக்கும் மற்ற சீனர்கள் எவ்வாறு கூடுதல் பணம் சம்பாதிப்பது என்று இன்னும் சிந்தித்து வருகிறார்கள். ஆனால் நானோ ரகசியங்களைக் கசியவிடுகிறேன்,” என்று வெய் அவரின் தாய்க்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தார்.

அதற்கு அவரின் தாய், “நல்ல வேலை செய்தாய்” என்று பதிலளித்திருந்தார்.

தகவல்களைப் பரிமாறியதற்காக வெய்க்குச் சீன உளவுத் துறை அதிகாரி 18 மாதங்களில் 12,000 அமெரிக்க டாலருக்கும் மேல் கொடுத்திருந்தார்.

தீர்ப்பு டிசம்பர் முதல் தேதி அறிவிக்கப்படும். வெய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படக்கூடும்.

குறிப்புச் சொற்கள்