யூத, முஸ்லிம் பாகுபாடு குற்றச்சாட்டுகள்மீது விசாரணை தொடக்கம்

1 mins read
566dac64-a3e2-48c1-b49c-01c0e72d82ac
இஸ்ரேலில் ஹமாசால் கடத்தப்பட்ட சிலரின் படங்கள் இருக்கும் சுவரொட்டிகள் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கம்பத்தில் ஒட்டப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருக்கும் ஆறு கல்லூரிகளிலும் ஒரு மாவட்டப் பள்ளியிலும் பயின்றுவரும் யூத, முஸ்லிம் மாணவர்களுக்கு நடந்த இனப் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகளின்மீதான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கக் கல்வி அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.

காஸாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடந்துவரும் போரின் தாக்கத்தால் இந்தக் குற்றச்சாட்டுகள் தலைதூக்கியுள்ளதாக அது மேலும் குறிப்பிட்டது.

இதுபோன்ற வேறொரு சந்தர்ப்பத்தில், ஐவி லீக் பள்ளியில் பயிலும் யூத சமயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையம் மூலம் மிரட்டல் விடுத்ததாக சந்தேகிக்கப்படும் கார்னெல் பல்கலைக்கழக மாணவர்மீது அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த அக்டோபர் மாதம் குற்றஞ்சாட்டினர்.

“எங்கள் பள்ளிகளில் மாணவர்களிடையே வெறுப்புக்கு இடமில்லை. யூதர்கள், முஸ்லிம்கள், அரேபியர்கள், சீக்கியர்கள் போன்ற இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கும் மாணவர்கள் தாக்குதலுக்கு இலக்காகும்போது அவர்களைப் பாதுகாக்க பள்ளிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் ஏற்ற பாதுகாப்பான கல்விச் சூழலைப் பள்ளிகள் உறுதிசெய்ய வேண்டும்,” என அந்நாட்டுக் கல்வி அமைச்சின் செயலாளர் மிகுவல் கார்டோனா வலியுறுத்தி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்