மணிலா: அமெரிக்க, பிலிப்பீன்ஸ் ராணுவ வீரர்கள் இணைந்து முதல்முறையாக ஜப்பானியப் படைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 20) தங்களின் வருடாந்தர ராணுவப் பயிற்சிகளைத் தொடங்கின.
மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில் இந்தப் பயிற்சியை அந்நாடுகள் மேற்கொண்டன.
தைவான் நீரிணையை நோக்கியுள்ள பிலிப்பீன்சின் வடக்குப் பகுதியிலும் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதிக்கு அருகேயுள்ள வட்டாரத்திலும் நடைபெறும் ராணுவ ஒத்திகையில் அப்படைகள் துப்பாக்கிச்சூடும் பயிற்சிகளை மேற்கொள்கின்றன.
வடக்கு லூசோன் (Luzon) தீவின் கடற்கரைக்கு அப்பால், இரண்டாம் உலகப் போர் காலத்து கண்ணிவெடி அகற்றும் கப்பல் (Minesweeper) ஒன்றைத் தகர்ப்பதற்கு,1,400 வீரர்களைக் கொண்டுள்ள ஜப்பானிய ராணுவம் ‘டைப் 88’ ரக ஏவுகணையைப் பயன்படுத்தும் என பிலிப்பீன்ஸ் ராணுவப் பயிற்சிக்கான பேச்சாளர் கர்னல் டெனிஸ் ஹெர்னாண்டஸ் தெரிவித்தார்.
‘டைப் 88’ என்பது ஜப்பானிய நிறுவனமான மிட்சுபிசியால் உருவாக்கப்பட்ட நிலத்திலிருந்து கப்பலைத் தாக்குவதற்காக ஏவப்படும் ஏவுகணை அமைப்பாகும்.
19 நாள்கள் நடைபெறும் இந்த பாலிகாட்டன் (Balikatan) பயிற்சியில் 17,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், விமானப்படையினர், கடற்படையினர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கடந்த ஆண்டு நடந்த பயிற்சியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கைக்கு இது இணையானது. அதில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் படைகளும் அடங்கும்.
பிலிப்பீன்சுடனான உறுதியான கூட்டணியை வெளிப்படுத்தவும் இந்தோ-பசிபிக் வட்டாரத்திற்கான அர்ப்பணிப்பை நிரூபிக்கவும் இது ஒரு வாய்ப்பு எனத் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) நடந்த தொடக்க விழாவிற்கு முன்னதாக அமெரிக்க பயிற்சிக்கான பேச்சாளர் ராபர்ட் பன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 28ஆம் தேதி, ஈரான்மீது அமெரிக்கா, இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தின.
இதனால், மூண்ட மத்திய கிழக்கு போர் தற்காலிகமாக இரு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கான காலவரையறை முடிவடைய இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், இந்தப் பாலிகாட்டன் பயிற்சி நடைபெறுகிறது.
மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, இறக்குமதியை முற்றிலும் நம்பியிருக்கும் பிலிப்பீன்சைக் கடுமையாகப் பாதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

