கொலம்பியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதியளிக்க அமெரிக்கா திட்டம்

கொலம்பியாவுக்கு ஒரு பில்லியன் டாலர் பாதுகாப்பு நிதியளிக்க அமெரிக்கா திட்டம்

2 mins read
261ad74a-2ea8-4adc-bef0-77e03e15159c
கொலம்பியாவின் புதிய அதிபராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற திரு டி லா எஸ்ப்ரியெல்லா (நடுவில்), குற்றங்களை ஒடுக்கவும் பொருளியலை மீட்டெடுக்கவும் உறுதிபூண்டுள்ளார்.  - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

வா‌ஷிங்டன்: கொலம்பியாவின் புதிய அரசாங்கத்திற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமான பாதுகாப்பு உதவியை வழங்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் பொதுவான இலக்குகளை எட்டுவதில் கொலம்பியாவின் புதிய வலசாரி அதிபர் அபெலார்டோ டி லா எஸ்ப்ரியெல்லாவுக்கு அந்த நிதியாதரவை அளிக்க எண்ணியிருப்பதாக அது கூறியது.

கொலம்பியாவின் புதிய அதிபராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்ற திரு டி லா எஸ்ப்ரியெல்லா, குற்றங்களை ஒடுக்கவும் பொருளியலை மீட்டெடுக்கவும் உறுதிபூண்டுள்ளார்.

தேர்தலின்போது திரு டிரம்ப் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராய்ப் போராடுவதாக உறுதியளிக்கும் வலசாரித் தலைவர்களின் ராணுவக் கூட்டணிக்குள் கொலம்பியாவை டிரம்ப் நிர்வாகம் வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு கூறியது.

லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்காவின் பங்களிப்பையும் செல்வாக்கையும் அதிகரிக்கத் திரு டிரம்ப் நடவடிக்கை எடுத்துவருகிறார்.

வெனிசுவேலாவின் முன்னாள் அதிபர் நிக்கலஸ் மடுரோவைக் கைதுசெய்ய இவ்வாண்டு ஜனவரி மாதம் அதிரடித் தாக்குதலுக்கு உத்தரவிட்டார் திரு டிரம்ப். மேலும், கரீபியன் கடலில் உள்ள படகுகள் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய பல தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள், இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை, ஏகாதிபத்தியதன்மை கொண்டவை, நீதிமன்ற விசாரணைக்கு அப்பாற்பட்ட படுகொலைகளுக்குச் சமமானவை என்று கூறுகின்றனர்.

ஆனால், இவற்றைப் போதைப்பொருள் கடத்தலையும் சட்டவிரோதக் குடியேற்றத்தையும் தடுப்பதற்கான முயற்சிகள் என்று திரு டிரம்ப் கூறுகிறார்.

கொலம்பியாவின் முதல் இடசாரி அதிபர் குஸ்டாவோ பெட்ரோவுடன் பல்வேறு விவகாரங்களில் அவர் வெளிப்படையாக மோதியிருந்தார்.

காஸா விவகாரம் பற்றியும் கரீபியன் கடற்பகுதியில் படகுகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்தும் திரு டிரம்ப்பைக் கடுமையாகச் சாடியிருந்தார் திரு பெட்ரோ.

தேர்தலின்போது திரு டி லா எஸ்ப்ரியெல்லாவிற்கு அமெரிக்க அதிபர் ஆதரவளித்ததையும் அவர் விமர்சித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்பாதுகாப்புஉதவி