இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்குப் புதிய வரி விதிக்க அமெரிக்கா திட்டம்

படம்: இபிஏ

25 Nov 2026 - 5:30 pm

2 mins read

வாஷிங்டன்: இந்தியா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 13 பிற நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கான வரிகளை உயர்த்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 16 நாடுகளும் வழங்கும் தொழில்துறை மானியங்கள் குறித்து அமெரிக்க வணிகப் பிரதிநிதி அலுவலகம் பல மாதங்களாக நடத்தி வந்த விசாரணையின் முடிவுகள் இன்னும் சில நாள்களில் வெளியிடப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், வரி நடைமுறைப்படுத்தப்படும் கால அட்டவணையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மானியங்களால் தூண்டப்பட்ட அதிகப்படியான உற்பத்தியால், குறைந்த விலையில் பொருள்களைக் குவித்து அமெரிக்க நிறுவனங்களை அந்நாடுகள் பாதிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

அதற்குப் பதிலடியாகவே, 1974ஆம் ஆண்டின் வணிகச் சட்டப் பிரிவு 301ன்கீழ் புதிய வரிகள் விதிக்கப்படவுள்ளன.

கடந்த 2025 ஏப்ரலில் டிரம்ப் விதித்த பரந்த வரிகளை, அரசியலமைப்பிற்கு எதிரானது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் இவ்வாண்டு பிப்ரவரியில் ரத்து செய்தது. அதற்கு மாற்றாக, கட்டாய உழைப்புத் தடைகளைச் சரியாக அமல்படுத்தவில்லை எனக் கூறி ஜூலையில் 60 வணிகப் பங்காளிகள் மீது 10 விழுக்காடு முதல் 12.5 விழுக்காடு வரை வரி விதிக்கப்பட்டது. அதன் இரண்டாவது கட்ட நடவடிக்கையாகத் தற்போது அறிவிக்கப்படவுள்ள கூடுதல் வரிகள் அமைகின்றன.

பணவீக்கம், வாழ்க்கைச் செலவினக் கவலைகளால் நவம்பர் இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்தபோதிலும், இறக்குமதி வரிகளை விதிப்பதில் டிரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், வரிகளை ரத்து செய்யும் சட்டங்களைத் தமது வீட்டோ அதிகாரத்தால் டிரம்பால் தடுக்க முடியும்.

கடந்த வாரம் சீனாவின் ஷென்சென் நகரில் அதிபர் ஸி ஜின்பிங்கை டிரம்ப் சந்தித்த நிலையில், அடுத்த மாதம் ஃபுளோரிடாவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டிலும் ஸி பங்கேற்கவுள்ளார். இரு தலைவர்களும் நெருங்கி வந்தாலும், சீனாவின் 1.2 டிரில்லியன் டாலர் வணிக உபரியும், அதிகப்படியான உற்பத்தித் திறனும் அமெரிக்க-சீன உறவில் பெரும் முட்டுக்கட்டையாகவே நீடிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
உலகம்அமெரிக்காவரிஇந்தியாசிங்கப்பூர்சீனாடோனல்ட் டிரம்ப்