வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அண்மையில் உலக நாடுகளின் இறக்குமதிகளுக்குத் தாம் விதித்த வரி பெரும்பாலான நாடுகளுக்கு 90 நாள்கள் நிறுத்திவைக்கப்படுவதாக புதன்கிழமை (ஏப்ரல் 9) கூறியுள்ளார்.
இருப்பினும், சீனப் பொருள்களுக்கு மட்டும் அவர் மேலும் வரி விதித்துள்ளார்.
ஏப்ரல் 9ஆம் தேதி நடப்புக்கு வந்த கூடுதல் வரிகளை 90 நாள்கள் நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய திரு டிரம்ப், 75க்கு மேற்பட்ட நாடுகள் பதிலுக்குப் பதில் அமெரிக்கப் பொருள்கள் மீது வரி விதிக்காமல் பேச்சுவார்த்தைக்கு முன்வந்திருப்பதை அடுத்து இவ்வாறு முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஏப்ரல் 5ஆம் தேதி நடப்புக்கு வந்த அனைத்து நாடுகளுக்குமான 10 விழுக்காட்டு வரியில் மாற்றமில்லை.
நெருங்கிய நட்பு நாடுகள் உட்படப் பல்வேறு நாடுகளைத் தண்டிக்கும் விதமாக வரி விதித்த நடவடிக்கையிலிருந்து வியப்பளிக்கும் விதமாக அவர் பின்வாங்கியதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
உலக நாடுகளின் சந்தைகளைச் சீனா மதிப்புடன் நடத்தவில்லை என்பதன் அடிப்படையில் அந்நாட்டுப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 125 விழுக்காடாக உயர்த்துவதாகக் கூறிய திரு டிரம்ப், அது உடனடியாக நடப்புக்கு வருவதாகவும் சொன்னார்.
அதற்குச் சற்று முன்னர்தான் சீனப் பொருள்களுக்கு 104 விழுக்காட்டு வரி விதிப்பதாக அவர் கூறியிருந்தார். சீனா அதற்குப் பதிலடியாக அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84 விழுக்காட்டு வரியை அறிவித்தது.
“அமெரிக்காவையும் இதர நாடுகளையும் ஏமாற்றிவரும் சீனா என்றாவது ஒருநாள், அது நீடிக்காது அல்லது ஏற்புடையதன்று என்பதைப் புரிந்துகொள்ளும். விரைவில் அத்தகைய சூழல் ஏற்படும் என்று நம்புகிறேன்,” என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அதிபர் டிரம்ப் பின்வாங்கவில்லை என்பதை வலியுறுத்திய அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட், “இத்தகைய நடவடிக்கையே அவரது உத்தியாக எப்போதும் இருந்துவந்துள்ளது. ஒருவகையில் சீனாவை அவர் நெருக்குதலுக்கு உள்ளாக்கியிருப்பதாகக் கூறலாம்,” என்றார்.
தமது வரி விதிப்பால் கடந்த வாரம் பங்குச் சந்தைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கர்கள் கவலைப்பட வேண்டாம் என்று வலியுறுத்திய திரு டிரம்ப், அனைத்துமே சரியாக நடக்கும் என்று கூறியிருந்தார்.
அவர் 90 நாள்களுக்கு வரியை நிறுத்திவைப்பதாக அறிவித்ததை அடுத்து வால் ஸ்திரீட் பங்குகளின் விலை ஏற்றம் கண்டது.

