ஈரான், அணுவாயுத உலைகளை முடக்குவதற்கான உடன்பாட்டை நிராகரித்ததை அடுத்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானியர்கள் டெஹ்ரானைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சண்டை ஐந்தாம் நாளாகத் தொடரும் வேளையில் திரு டிரம்ப் அவ்வாறு கூறினார்.
“நான் கையெழுத்திடும்படி சொன்ன உடன்பாட்டில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஈரான் அணுவாயுதத்தை வைத்திருக்க முடியாது. அதை மீண்டும் மீண்டும் சொன்னேன். அனைவரும் டெஹ்ரானைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்,” என்று திரு டிரம்ப் தமது ட்ருத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டார்.
அதையடுத்து சிறிது நேரத்தில் டெஹ்ரானில் வெடிப்புகள் குறித்தும் பயங்கரமான ஆகாயத் தற்காப்புத் தாக்குதல் குறித்தும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
முக்கிய அணுச்சக்தி கட்டமைப்புக்குத் தளமாக விளங்கும் நட்டான்ஸ் என்ற வட்டாரத்திலும் ஆகாயத் தற்காப்புகள் முடுக்கிவிடப்பட்டன என்று அஸ்ரிரான் செய்தித் தளம் சொன்னது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நள்ளிரவுக்குப் பின் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் அங்கு வெடிச்சத்தமும் கேட்டது.
கடந்த ஐந்து நாள்களில் ஈரானில் 224 பேர் மாண்டதாகவும் அவர்களில் பெரும்பாலோர் குடிமக்கள் என்றும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலில் 24 குடிமக்கள் மாண்டதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
ஈரானின் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை அடுத்து கிட்டத்தட்ட 3,000 இஸ்ரேலியர்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேலிய நிதியமைச்சர் பெஸலெல் ஸ்மொட்ரிச் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
சண்டைநிறுத்ததை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவுக்கு அழுத்தம் தர திரு டிரம்ப்பிடம் வலியுறுத்தும்படி ஓமான், கத்தார், சவூதி அரேபியா ஆகியவற்றிடம் ஈரான் சொன்னதாகத் தகவல் அறிந்த வட்டாரம் குறிப்பிட்டது. அதற்குப் பதிலாக அணுச்சக்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈரான் நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளும் என்று இரண்டு ஈரானிய, மூன்று வட்டார தகவல்கள் குறிப்பிட்டன.
இந்நிலையில், பாதுகாப்பு குறித்து அதிகரிக்கும் கவலையாலும் போரால் தனது ஆகாயவெளியை இஸ்ரேல் மூடியதாலும் இஸ்ரேலில் உள்ள சீனத் தூதரகம் தன் நாட்டு மக்களை தரை வழியாக நாட்டைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தியது.