பெய்ஜிங்: சீன அதிபர் ஸி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சீனத் தலைநகர் சென்றுள்ளார்.
பெய்ஜிங் அனைத்துலக விமான நிலையத்தில் புதன்கிழமை (மே 13) இரவு 8 மணியளவில் வந்திறங்கிய திரு டிரம்ப்பை சீனத் துணை அதிபர் ஹான் ஸெங் ராணுவ மரியாதையுடன் வரவேற்றார்.
சிவப்புக் கம்பள வரவேற்பு விழாவில் அவரை வரவேற்கும் வண்ணம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இரு நாடுகளின் கொடிகளை அசைத்தபடி நின்றிருந்தனர்.
ஈரான் போர்ச் சூழலில் உலகின் இரு பெரும் பொருளியல் நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவை நிலைப்படுத்த முயலும் வேளையில் அமெரிக்க அதிபர் சீனா சென்றுள்ளார்.
‘மக்கள் மாபெரும் அரங்கி’ல் வியாழக்கிழமை (மே 14) திரு ஜின்பிங்கை திரு டிரம்ப் சந்திக்க உள்ளார்.
கடந்த ஆண்டு தென்கொரியாவில் அவ்விருவரும் சந்தித்தனர். அப்போது, சீனா தனது அரிய கனிம வளங்களைப் பயன்படுத்தி, வரிகளைத் திரும்பப் பெறுமாறு திரு டிரம்ப்புக்கு அழுத்தம் கொடுத்தது.
அதன் பிறகு, கூடுதல் வரிகளை விதிப்பதற்கான திரு டிரம்ப்பின் உத்தரவுகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்தியது.
அதன் பின்னர், இரு தலைவர்களும் தற்போது நேரடியாகச் சந்திக்க உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய கிழக்கு மோதலில் சீனாவின் பங்கு முதல் அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளைத் திரும்பப் பெறுவது வரையிலான பல அம்சங்களில் சீனத் தலைவருக்கு அழுத்தம் கொடுக்க சீன உச்சநிலைக் கூட்டத்தை திரு டிரம்ப் பயன்படுத்த உத்தேசித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

