வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கான ஆதரவு கணிசமாகச் சரிந்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு அவர் திரும்பியது முதல் இதுவரை இல்லாத வகையில் அது குறைந்ததை அமெரிக்காவின் ஆக அண்மைய ராய்ட்டர்ஸ்/ இப்சோஸ் கருத்தாய்வு காட்டுகிறது.
ஆறு நாள்கள் நடைபெற்ற கருத்தாய்வில் அதிபராக திரு டிரம்ப் நடந்துகொள்ளும் விதத்தை 42 விழுக்காட்டினர் ஆதரித்தனர். மூன்று வாரங்களுக்கு முன் அது 43 விழுக்காட்டில் இருந்தது. ஜனவரி 20ஆம் தேதி திரு டிரம்ப் பதவியேற்ற சில மணி நேரங்களில் 47 விழுக்காட்டினர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்குமுன் அதிபராகப் பதவி வகித்த ஜனநாயகக் கட்சியின் திரு ஜோ பைடனைவிட திரு டிரம்ப்புக்கான ஆதரவு விகிதம் உயர்வாக இருந்தாலும் அமெரிக்கர்களில் பலர் திரு டிரம்ப்பின் சில நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ளனர்.
பரந்த மனப்போக்குடன் இருக்கும் பல்கலைக்கழகங்களைத் தண்டிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது, வாஷிங்டனில் உள்ள முக்கிய அரங்காகவும் கலாசாரக் கழகமாகவும் இருக்கும் கென்னடி நிலையத்தின் தலைவராகத் தம்மை முன்னிறுத்த முற்படுவது போன்ற திரு டிரம்ப்பின் சில முயற்சிகள் மக்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ மத்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்கிதான் ஆகவேண்டும் என்று 83 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.
வெனிசுவேலா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் உறுப்பினர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்க எந்த வாய்ப்பும் தரமால் சொந்த நாட்டுக்கு அவர்களை அனுப்பிவைக்க எடுக்கப்பட்ட முடிவை மத்திய நீதிமன்ற நீதிபதி நிறுத்தும்படி உத்தரவிட்டார். அதை மீறியதற்காக டிரம்ப் நிர்வாக அதிகாரிகள்மீது குற்றஞ்சாட்டப்படலாம்.
பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கப்படும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அதிபர் அவற்றுக்கான நிதியைப் பிடித்துவைக்கலாம் என்ற கருத்தை 57 விழுக்காட்டினர் நிராகரித்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
முக்கிய கலாசாரக் கழகங்களான தேசிய அருங்காட்சியகங்கள், அரங்குகள் போன்றவற்றை அதிபர் கட்டுப்படுத்தவேண்டும் என்ற கருத்தை ஏற்க முடியாது என்று 66 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர்.