அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னிலையில் டிரம்ப்

2 mins read
d9fb21b3-c3d4-4acb-b357-90dfc997f475
அதிபர் தேர்தலில் கமலா ஹாரிசைவிட டோனல்ட் டிரம்ப் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிப்பதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - கோப்புப் படங்கள்: ஊடகம்

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப் 246 இடங்களிலும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் 194 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர். இது தற்போதைய நிலவரம்.

வாக்குகள் எண்ண ஆரம்பித்ததிலிருந்து டோனல்ட் டிரம்ப் 150க்கு மேல் முன்னிலை வகித்தார். அந்த சமயத்தில் கமலா ஹாரிஸ் 99 இடங்களில் முன்னிலையில் இருந்தார்.

ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு இரு வேட்பாளர்களுக்கு இடையிலான வித்தியாசம் குறைந்தது.

பென்சில்வேனியாவில் ஆரம்பத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலைப் பெற்ற நிலையில் தற்போது டோனல்ட் டிரம்ப் முன்னிலையில் இருக்கிறார். நியூயார்க்கில் கமலா ஹாரிஸ் 58.8 விழுக்காடு வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டோனல்ட் டிரம்ப்புக்கு 41.2 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. முக்கிய மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலைனாவில் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின. அதில், ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, ஃபுளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் டோனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தீர்மானிக்கும் ஏழு மாகாணங்களில் வடக்கு கரோலைனா மற்றும் ஜார்ஜியா ஆகிய இரண்டு மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

கமலா ஹாரிஸ், கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயார்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலான்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

குறிப்பிடும்படியாக கலிபோர்னியாவில் வெற்றி பெற்றதால் கமலா ஹாரிசுக்கு 54 தேர்வாளர் குழு வாக்குகள் கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் வேளையில் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக வெள்ளை மாளிகை முன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்