அமெரிக்க அதிபரின் அவதூறு வழக்கு: தற்காத்துப் பேசும் பிபிசி

2 mins read
a769addc-9b6e-405a-a627-770b45ea287d
வழக்கு தள்ளுபடி செய்யப்படாவிட்டால் அதை புளோரிடாவிலிருந்து நியூயார்க் நீதிமன்றத்திற்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்போவதாக பிபிசி நிறுவனம் கூறியுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

மயாமி: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடுத்துள்ள US$10 பில்லியன் (S$12.86 பில்லியன்) இழப்பீடு கோரும் அவதூறு வழக்கில் பிபிசி செய்தி நிறுவனம் தனது தரப்பைத் தற்காத்துப் பேசியுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய காணொளி தவறாகச் சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அது நியாயமானதே என்று பிபிசி நீதிபதியிடம் கூறியது.

முன்னதாக, 2021ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் நிகழ்ந்த கலகம் தொடர்பான காணொளியில் தமது உரையைத் தவறாகச் சித்திரிக்கும் வகையில் பிபிசி தொகுத்ததாகச் சாடிய திரு டிரம்ப், 2025 டிசம்பரில் அந்நிறுவனத்தின் மீது அவதூறு வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கைத் தள்ளுபடி செய்வது தொடர்பில் தீர்ப்பு வழங்கப்படும்வரை ஆதாரங்களைப் பரிமாறிக்கொள்வதை நிறுத்திவைக்கும்படி பிபிசி நிறுவனம் திங்கட்கிழமை (ஜனவரி 12) மயாமி நீதிபதியிடம் கேட்டுக்கொண்டது.

மேலும், அந்த வழக்கை புளோரிடாவிலிருந்து நியூயார்க் நீதிமன்றத்திற்கு மாற்றவும் முயற்சி மேற்கொள்ளப்போவதாக அது கூறியது. ஏனெனில் தனது ஆவணக் காணொளி புளோரிடாவில் தயாரிக்கப்படவோ ஒளிபரப்பப்படவோ இல்லை என்பதை பிபிசி சுட்டியது.

2024ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் ஒளிபரப்பான அந்தக் காணொளி, தமது ஆதரவாளர்களை நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்கும்படி அழைப்பு விடுப்பதுபோல் தவறாகத் தொகுக்கப்பட்டிருப்பதாகத் திரு டிரம்ப் கூறினார்.

அந்தக் காணொளி அத்தகைய தவறான கண்ணோட்டத்தை உருவாக்கியதைக் கடந்த நவம்பர் 10ஆம் தேதி, பிபிசி செய்தி நிறுவனத் தலைவர் சமீர் ஷா ஒப்புக்கொண்டார். சில நாள் கழித்து நிறுவனம் இதன் தொடர்பில் இரண்டாவது முறையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ஆனால், அமெரிக்க அதிபர் கோரியதுபோல் இழப்பீடு தர அது மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்