தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதானிமீது அமெரிக்கா ஊழல் விசாரணை

2 mins read
f659be0f-1774-481d-8323-b0db9c4ef71a
இந்தியப் பெருஞ்செல்வந்தர் கௌதம் அதானி, அவரது நிறுவனம், அஸுர் நிறுவனம் ஆகியவற்றின்மீது அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: இந்தியாவின் அதானி நிறுவனம் லஞ்சம் வழங்கியதா என்பது குறித்தும் அதன் நிறுவனரும் பெருஞ்செல்வந்தருமான கௌதம் அதானியின் நடத்தை குறித்தும் அமெரிக்கா தனது விசாரணையை விரிவுபடுத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எரிசக்தித் திட்டம் தொடர்பில் தனக்குச் சாதகமாக நடந்துகொள்ள இந்தியாவில் அதிகாரிகளுக்கு அதானியோ அவரது நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ லஞ்சம் வழங்கினரா என்று புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாக ‘புளூம்பெர்க்’ செய்தி தெரிவிக்கிறது.

நியூயார்க் கிழக்கு மாவட்ட தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் வாஷிங்டனில் உள்ள நீதித்துறை மோசடித் தடுப்புப் பிரிவும் இந்த விசாரணையைக் கையாள்வதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘அஸுர் பவர் குளோபல்’ எனும் புதுப்பிக்கத்தக்க இந்திய எரிசக்தி நிறுவனம் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, “எங்கள் நிறுவனத் தலைவருக்கு எதிரான எந்த விசாரணை குறித்தும் நாங்கள் அறிந்திருக்கவில்லை,” என்று அதானி குழுமம் கூறியுள்ளது.

“மிக உயர்ந்த நிர்வாகத் தரங்களுடன் எங்கள் தொழிற்குழுமம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடப்பிலுள்ள லஞ்சல், ஊழல் தடுப்புச் சட்டங்களுக்கு உட்பட்டு முழுமையாக இணங்கி நடப்போம்,” என்று மின்னஞ்சல் வழியாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் புரூக்ளின் மற்றும் வாஷிங்டனில் உள்ள நீதித்துறைப் பேராளர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக புளூம்பெர்க் செய்தி கூறியது.

அத்துடன், அஸுர் நிறுவனத்திடமிருந்தும் பதில் கிடைக்கவில்லை என அச்செய்தி குறிப்பிட்டது.

கௌதம் அதானி, அவரது நிறுவனம், அஸுர் நிறுவனம் ஆகியவற்றின்மீது அமெரிக்க நீதித்துறை இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.

அமெரிக்க முதலீட்டாளர்கள் அல்லது சந்தைகளுடன் ஏதேனும் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டால், கூட்டரசு வழக்கறிஞர்கள் வெளிநாட்டு ஊழல் குற்றச்சாட்டுகளைக் கையாள அமெரிக்கச் சட்டம் அனுமதிக்கிறது.

முன்னதாக, அதானி நிறுவனம் தனது பங்கு விலைகளை மாற்றி அமைத்ததாகவும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆயினும், அந்தக் குற்றச்சாட்டுகளை அதானி நிறுவனம் வன்மையாக மறுத்தது. அதனைத் தொடர்ந்து சரிவைச் சந்தித்த அதானி நிறுவனப் பங்கு விலைகள் பின்னர் மீட்சி கண்டன.

குறிப்புச் சொற்கள்