சிங்கப்பூர்: அமெரிக்காவின் முற்றுகையை மீறி, சீன எண்ணெய்க் கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளது.
ரிச் ஸ்டாரி என்ற அந்த எண்ணெய்க் கப்பல், முற்றுகை தொடங்கிய பிறகு வளைகுடா பகுதியிலிருந்து வெற்றிகரமாக வெளியேறிய முதல் கப்பல் என்று கப்பல் போக்குவரத்துத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈரானுடன் வணிகத் தொடர்பில் இருந்ததாக, அக்கப்பல் மீதும் அதன் உரிமையாளரான ஷாங்காய் யுவான்ருன் ஷிப்பிங் நிறுவனம் மீதும் அமெரிக்கா பொருளியல் தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிட்டத்தட்ட 2,50,000 பேரல் மெத்தனால் ஏற்றியுள்ள அக்கப்பல், ஐக்கிய அரபுச் சிற்றரசின் ஹம்ரியா துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அதில் சீன மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, ரஷ்யா, ஈரானிய எண்ணெய்யையைக் கொண்டு சென்றதற்காகத் தடை செய்யப்பட்ட மற்றொரு கப்பலான ‘முரளிகிஷன்’ ஏப்ரல் 12ஆம் தேதி நீரிணைக்குள் நுழைந்தது. இக்கப்பல் ஏப்ரல் 16ஆம் தேதி ஈராக்கில் எரிபொருளை ஏற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

