வாஷிங்டன்: ஏமனில் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் ஐந்து தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அமெரிக்க ராணுவம் பிப்ரவரி 18ஆம் தேதி அறிவித்தது.
மூன்று கப்பல்களுக்கு எதிரான ஏவுகணைகள், மேற்பரப்பில் உள்ள ஆளில்லா விமானம் ஒன்று, நீர்மூழ்கி ஆளில்லா விமானம் ஒன்று ஆகியவற்றைத் தாக்கியதாக அமெரிக்க ராணுவத்தின் மத்திய தளபத்தியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஈரான் ஆதரவுள்ள ஹூதி போராளிகள் செங்கடலிலும் ஏடன் வளைகுடாவிலும் உள்ள கப்பல்களுக்கு எதிரான தங்கள் நடவடிக்கையைத் தொடங்கியதிலிருந்து அத்தகைய கடலடி ஆளில்லா விமானத்தை முதன்முறையாகப் பயன்படுத்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
கடலடி ஆளில்லா விமானத்தைத் தவிர, ஹூதி போராளிகள் தொலைதூரத்திலிருந்து இயங்கக்கூடிய படகு ஒன்றையும் பயன்படுத்தியதாக அறிக்கை குறிப்பிட்டது.
இருப்பினும், தாக்குதல்கள் நடந்த இடங்கள் குறித்து எந்தவொரு துல்லியமான தகவலும் வெளியிடப்படவில்லை.
கடலடி ஆளில்லா விமானங்கள் தற்போது மிக சக்திவாய்ந்த, பயன்மிக்க ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன.
ரஷ்யாவின் கருங்கடல் கப்பல்களுக்கு எதிராக உக்ரேன் கடலடி ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது.
ஹூதி போராளிகள் கடலடி ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது என்று அமெரிக்கத் தற்காப்பு அமைச்சின் முன்னாள் அதிகாரியும் மத்தியப் புலனாய்வு அமைப்பின் அதிகாரியுமான திரு மிக் முல்ராய் கூறினார். அவர்கள் தங்கள் உத்தியை மாற்றுவது போல் தெரிவதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஹூதி போராளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய தளபத்தியம், தாக்குதல்கள் பிப்ரவரி 17ஆம் தேதி நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது.