வாஷிங்டன்: அமெரிக்க ரகசியச் சேவைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், முக அடையாளத்தைச் சோதிக்கும் கைப்பேசிச் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
மத்திய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் பல மாதங்களாகப் பயன்படுத்திவரும் கருவிகளைப் போன்றதே அது. முறையான அனுமதியின்றி இருப்போரை நாடு கடத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அவர்களை அடையாளம் காண அதிகாரிகள் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
கடந்த மாதத்திலிருந்து ரகசியச் சேவைப் பிரிவு, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடிவுசெய்தது. அண்மையில் சீருடை அதிகாரிகள் சிலருக்கு அதனை வழங்கத் தொடங்கியிருப்பதாக அந்தப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.
ரகசியச் சேவைப் பிரிவின் புதிய செயலி, ‘சென்ட்ரி’ என்று வழங்கப்படுகிறது. குடிநுழைவு அதிகாரிகள் பயன்படுத்தும் கருவியைப் போன்றே மக்களை அடையாளம் காண்பதற்கு அதுவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஒருவரின் முகத்தையோ கைரேகையையோ கைப்பேசியின் படப்பிடிப்புக் கருவியைக் கொண்டு அதிகாரி முதலில் படம் பிடிப்பார். பின்னர், அந்தப் படங்களை அரசாங்கத்தின் மிகப் பெரிய தரவுத்தளங்களில் உள்ள விவரங்களுடன் செயலி ஒப்பிட்டுப் பார்க்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரகசியச் சேவைப் பிரிவு, அரசாங்கத் தலைவர்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. அரசியல் வன்முறைகள் குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் எவ்வாறு மேம்பட்ட தொழில்நுட்பங்களின் உதவியை அந்தப் பிரிவு நாடத் தொடங்கியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது. அதேநேரம், முக அங்கீகாரக் கருவியைச் சட்ட அமலாக்கத் துறையினர் எந்த அளவுக்குப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பதும் இதன்மூலம் தெரியவந்துள்ளது.
செயலி குறித்த கேள்விகளுக்கு ரகசியச் சேவைப் பிரிவின் துணை இயக்குநர் மேத்யூ குவின் பதில் தந்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டில் 40 விழுக்காடு கூடுதலான அச்சுறுத்தல்களை விசாரித்துள்ளதாக அவர் சொன்னார். மனநலத்தால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியோர் தொடர்பான சம்பவங்களில் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமாகத் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திரு மேத்யூ கூறினார்.

