பனாமா சிட்டி: பனாமா கால்வாயைக் கைப்பற்றப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ பனாமா சென்றுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சராக அவர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இது.
பிப்ரவரி 1ஆம் தேதி பனாமா சென்ற ரூபியோ, அங்கிருந்து மேலும் நான்கு சிறிய லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார்.
கடந்த 1999ஆம் ஆண்டு இறுதியில் பனாமா கால்வாயை அமெரிக்கா பனாமாவிடம் ஒப்படைத்தது.
இந்நிலையில், அதனைச் சுற்றியுள்ள துறைமுகங்களில் சீனா அதிக முதலீடு செய்து, அவற்றைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்வதாக அமெரிக்கா கருதுகிறது. அதனால், ராணுவ வலிமையைப் பயன்படுத்தி மீண்டும் அக்கால்வாயைத் தன்வயப்படுத்தும் வாய்ப்புள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அதன் தொடர்பில் பனாமா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ரூபியோ அங்கு செல்கிறார் என்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபின் ஆற்றிய தமது முதல் உரையின்போது டிரம்ப் கூறியிருந்தார்.
ரூபியோ ஞாயிற்றுக்கிழமையன்று பனாமா அதிபர் ஜோசே ராவுல் முலினோவைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்குமுன் பனாமா கால்வாயையும் அவர் சுற்றிப் பார்ப்பார் எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், பனாமா கால்வாய் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் முலினோ.
“அது முடிந்துபோன விவகாரம். பனாமா கால்வாய் பனாமாவிற்கே சொந்தம்,” என்று ஜனவரி 30ஆம் தேதியன்று அவர் கூறியிருந்தார்.
அதே வேளையில், பனாமா கால்வாயின் இருபக்கங்களிலும் உள்ள துறைமுகங்களை நிர்வகிக்கும் சிகே ஹட்சிசன் ஹோல்டிங்ஸ் எனும் ஹாங்காங் நிறுவனத்தில் தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, சீனா உள்ளிட்ட எந்த ஒரு வெளிநாடும் பனாமா கால்வாயில் ஆதிக்கம் செலுத்த விடமாட்டோம் என்றும் ரூபியோ கூறியுள்ளார்.
அட்லாண்டிக், பசிபிக் பெருங்கடல்கள், அவற்றின் கடலோரங்களுக்கு இடையிலான முக்கிய இணைப்புவழியாகப் பனாமா கால்வாய் திகழ்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் கொள்கலன் போக்குவரத்தில் 40 விழுக்காடு அவ்வழியாகவே நடைபெறுகிறது.