லாஸ் வேகஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) நடைபெறவுள்ள வேளையில், வன்முறை நிகழுமோ என்ற அச்சத்தில் தேர்தல் நாளிலும் அதற்குப் பிறகும் பாதுகாப்பை வலுப்படுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் நெவாடா போன்ற முக்கிய மாநிலங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்பட்டுள்ளன. 2020 தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
ஆர்ப்பாட்டங்கள் அல்லது வன்முறை ஏற்படுமோ என்ற அச்சத்தில், கடந்த தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாக செயல்பட்ட அரிசோனா பள்ளிகளும் தேவாலயங்களும் இம்முறை அவ்வாறு செயல்பட மாட்டா என உள்ளூர் தேர்தல் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
முக்கிய மாநிலங்களையும் தாண்டி, தேசிய காவல்படையினரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக ஒரிகன், வாஷிங்டன் மாநில அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஏழு மாநிலங்களில் டிரம்ப், ஹாரிஸ் இவர்களில் எவர் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற சூழல் நிலவுகிறது. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வடகரோலினா, பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய அந்த மாநிலங்களில் அவ்விருவரும் வாக்காளர்களின் ஆதரவை நாடியுள்ளனர்.
கடுமையான போட்டி எழும் சூழலில், இந்த மாநிலங்களில் வேட்பாளர்களிடையே சில வாக்குகள் வித்தியாசம் வெற்றியாளரைத் தீர்மானிக்கக்கூடும்.
தேர்தல் நாளில் வாக்காளர்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதோடு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்கின்றனர்.
இதில், செனட் சபையில் 34 உறுப்பினர்களும் பிரதிநிதிகள் சபையில் 435 பேரும் தேர்வுசெய்யப்படுவர்.
தொடர்புடைய செய்திகள்
நவம்பர் 2ஆம் தேதி நிலவரப்படி, 75 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்துவிட்டதாக ஃபுளோரிடா பல்கலைக்கழக தரவுத்தளம் குறிப்பிடுகிறது.
இரு கட்சிகள் சார்ந்த கொள்கை நிலையத்தின்படி, இந்த அதிபர் தேர்தலில் வாக்களிக்க மொத்தம் 244 மில்லியன் அமெரிக்கர்கள் தகுதிபெற்றுள்ளனர். ஆனால், அவர்களில் எத்தனைப் பேர் வாக்களிப்பர் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

