தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய விமானங்களை மறுப்பதற்கு அமெரிக்க வரிகள் காரணம்: சீனா

2 mins read
1a6b4183-8c8b-4b2e-a5e1-965d64575b79
அமெரிக்க வரிகளால் புதிய விமானங்களைப் போயிங் நிறுவனத்திடமிருந்து பெறப் போவதில்லை என்று சீனா கூறியது. - படம்: ஏஎஃப்பி

பெய்ஜிங்: சீனா, மிகப் பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங்கிடமிருந்து புதிய விமானங்கள் வாங்குவதை நிறுத்த முடிவெடுத்ததற்கு அமெரிக்காவின் வரிகள்தான் காரணம் என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) குறைகூறியுள்ளது.

அமெரிக்காவின் வரிகள் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சந்தையில் தடங்கலை ஏற்படுத்தியிருப்பதாக அது சாடியது.

“அமெரிக்காவின் வரிகள் அனைத்துலக வர்த்தகத் தொடர்புகள், விநியோகத் தொடர்புகள் ஆகியவற்றின் நிலைத்தன்மையைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன” என்று சீனாவின் வர்த்தக அமைச்சு சொன்னது.

சம்பந்தப்பட்ட சீன விமானங்களும் அமெரிக்காவில் உள்ள போயிங் நிறுவனமும் பயங்கரமாக அவதியுறுகின்றன என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

சீன இறக்குமதிகள்மீது அமெரிக்காவின் புதிய வரிகள் 145 விழுக்காடு வரை எட்டியுள்ளது. பதிலுக்கு அமெரிக்க இறக்குமதிகள்மீது சீனா புதிதாக 125 விழுக்காட்டு வரி விதித்தது.

வர்த்தகப் போர் காரணமாக சீனா விமானங்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டதாகப் போயிங்கின் தலைமை நிர்வாக அதிகாரி கடந்த வாரம் உறுதிப்படுத்தினார்.

சீனா தொடர்ந்து வாங்குவதை நிறுத்திக்கொண்டால் இதர விமான நிறுவனங்களுக்கு விமானங்களை விற்கவேண்டிய நிலை ஏற்படும் என்று போயிங் கூறியது.

போயிங் இவ்வாண்டு ஏறக்குறைய 50 விமானங்களைச் சீனாவுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தது. இதர வாடிக்கையாளர்களுக்கு அந்த விமானங்களை அனுப்ப போயிங் அதிக காலம் காத்திருக்காது என்று குறிப்பிட்டது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனா ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்குவதைக் குறைகூறியதோடு அழகாக செய்துமுடிக்கப்பட்ட விமானங்களைப் பெற மறுக்கும் சீனாமீது இழப்பீடு கோரவேண்டும் என்றார்.

அதற்குப் பதிலளித்த சீன வர்த்தக அமைச்சு, “திரு டிரம்ப்பின் வரிகளால் பல நிறுவனங்கள் வழக்கமான வர்த்தகத்தையும் முதலீட்டையும் தொடரமுடியாமல் இருக்கின்றன,” என்றது.

இருநாட்டு வர்த்தகங்களுக்கும் இடையிலான வணிகக் கூட்டுறவுக்கு ஆதரவு வழங்க சீனா தயார் என்றும் அது குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்