புதுடெல்லி: அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் முக்கியத் துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் வியாழக்கிழமை (அக்டோபர் 29) உறுதிப்படுத்தினார்.
அந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு சாதகமாகவே அமையும் என்று வலியுறுத்திய அவர், அதன் விவரங்கள் வெளிவந்ததும் இந்தியர்கள் அதன் அம்சங்களை அறிந்து கொண்டாடுவர் எனவும் கருத்துரைத்தார்.
தொழில்துறை மேம்பாட்டு ஆய்வுகளுக்கான பல்கலைக்கழக மாநாட்டில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், அமெரிக்கா-இந்தியா ஆகிய இருநாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை நெருங்கிவிட்டன என்று தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சில நாள்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவது மிக அருகாமையில் உள்ளது என்று கருத்துரைத்த பிறகு திரு பியூஷ் கோயலும் அதற்கான 99 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று கூறியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மிகவும் ஆவலுடன் பலரால் எதிர்பார்க்கப்படும் அமெரிக்காவுடனான இநதியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய எதிா்க்கட்சிகள் குறைகூறியுள்ள நிலையில் திரு கோயல் அவற்றை நிராகரித்தார்.
ஒப்பந்தத்தின் முழுவிவரங்களை அறியாமல் எதிர்க்கட்சிகள் எப்படி குறைகூறுகின்றன என்பதை அறிய முடியவில்லை என்று அவர் சாடினார். புரிதல் இன்றி அல்லது அறிவின்மையினால் எழுந்துள்ள குறைகூறல்கள் குறித்து கருத்துரைப்பது தேவையற்றது எனவும் அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைவதற்கு, எண்ணெய் விற்பனை ஒரு முக்கியத் தடையாக இருந்துவருகிறது. இதர வரிகளில் இருநாடுகளும் இணக்கம் ஏற்பட்டாலும் ரஷ்யாவிடம் இந்தியா வாங்கும் எண்ணெய் குறித்து அமெரிக்கா பல நிபந்தனைகளை முன்வைத்தது.
அதோடு கட்டாயமாக தொழிலாளர்களை வேலையில் அமர்த்தி அதன்வழி ஏற்றுமதி ஆகும் பொருள்கள் குறித்தும் அமெரிக்க அமைப்புகள் விசாரணை நடத்திவருகின்றன. அதன்படி, இந்தியா அதுபோன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு தடைகள் விதித்துள்ளது.
