ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உதவி அறிவிக்காத அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உதவி அறிவிக்காத அமெரிக்கா

படம்: ராய்ட்டர்ஸ்

06 Sep 2025 - 6:42 pm

2 mins read

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கத்தில் 2,200க்கும் மேற்பட்டவர்கள் மாண்டுள்ளனர்.

எனினும் இது ஏற்பட்டு கிட்டத்தட்ட ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில், அமெரிக்கா அவசர உதவி அளிக்கும் விதமாக இதுவரை எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உதவி வழங்கும் திட்டம் ஏதும் உள்ளதா என்றே தெரியவில்லை என இரு உயர் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவிப்பதாக தகவலறிந்த வட்டாரம் ஒன்றை சுட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

அமெரிக்க அரசாங்கம் பலகாலமாக உலகப் பேரிடர் நிவாரணப் பணிகளில் முன்னோடியாக விளங்கிய நிலையில் தற்பொழுது வெளிநாட்டு உதவி நிதியை பெருமளவு குறைத்ததோடு மிக முக்கிய வெளிநாட்டு உதவித் திட்ட அமைப்பு ஒன்றை அதிபர் டோனல்ட் டிரம்ப் இழுத்து மூடியதை அமெரிக்க அரசின் முன்னாள் உயர் அதிகாரிகள் சுட்டுகின்றனர்.

அமெரிக்காவின் அனைத்துலக வளர்ச்சி அமைப்பு அதிகாரபூர்வமாக செப்டம்பர் 4ஆம் தேதி இழுத்து மூடப்பட்டது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சு செப்டம்பர் 1ஆம் தேதி நிலநடுக்கம் தொடர்பாக எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

ஆனால், செப்டம்பர் 5ஆம் தேதிவரை அமெரிக்க வெளியுறவு அமைச்சு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. அவசரகால உதவிக்கு அப்படியொரு அறிவிப்பே அதற்கு முதல்படி என்று யுஎஸ் எய்ட் என்ற உதவி அமைப்பில் பணியாற்றிய பெயர் குறிப்பிட விரும்பாத இரு முன்னாள் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதுபோன்ற அறிவிப்பு பொதுவாக ஒரு பேரிடர் சம்பவம் நிகழ்ந்த 24 மணிநேரத்திற்குள் விடுக்கப்படுவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

இதில் வெளியுறவு அமைச்சு அதிகாரிகளால் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க பேரிடர் உதவி குறித்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

அது பற்றி அதிபரின் வெள்ளை மாளிகையும் பரிசிலீத்ததாகக் கூறும் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரி ஆப்கானிஸ்தானுக்கு உதவி செய்வது இல்லை என்ற கொள்கையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்