வர்த்தக வரிகளைத் தவிர்க்க சீனாவுக்கு மறைமுகமாக உதவும் நாடுகள்: அமெரிக்கா

வர்த்தக வரிகளைத் தவிர்க்க சீனாவுக்கு மறைமுகமாக உதவும் நாடுகள்: அமெரிக்கா

2 mins read
f0a56893-faed-4f32-ab0f-660719950898
வரிகளைத் தவிர்த்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு அமெரிக்கா ஆகஸ்ட் 2025ல் 40 விழுக்காடு கூடுதல் வரி விதித்தது. - படம்: சிங்கப்பூர் துறைமுக ஆணையம்
Google News Preferred Icon

அமெரிக்கா விதித்துள்ள வர்த்தக வரிகளைத் தவிர்க்க சிங்கப்பூர் உட்பட பல நாடுகள் சீனாவுக்கு மறைமுக உதவி வழங்குவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் அரசாங்கம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீன ஏற்றுமதியாளர்கள் குறைந்த வரிகள் விதிக்கப்பட்ட நாடுகளின் வழியாக அவர்களின் பொருள்களை மறுஏற்றுமதி செய்து அமெரிக்காவுக்குள் அவற்றை மீண்டும் இறக்குமதி செய்வதாக அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியது.

முதலில் ஏற்றுமதி செய்யப்பட்ட நாட்டை மறைத்து மற்றொரு நாட்டின் வழியாக செய்யப்படும் இறக்குமதியை வெளிப்படுத்தும் விதமாக ‘மாபெரும் மறுஏற்றுமதி மோசடி’ என்ற தலைப்பில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டு ‘எல்லைகளுக்கான துப்பறிவாளர்’ என்ற செயல்முறையுடன் வேறு பல வழிவகைகளையும் பயன்படுத்தி அதிபர் டிரம்பின் நிர்வாகம் சட்டவிரோத மாற்று ஏற்றுமதி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் என்று அறிக்கை நம்பிக்கை தெரிவித்தது.

இதற்கிடையே அந்த அறிக்கையில் அமெரிக்க வரிகளைத் தவிர்க்கும் முக்கியப் பொருளியல்களைக் கொண்ட நாடுகளுக்கான ‘அபாயகரமான’ முதல் நிலைப் பட்டியலில் இந்தியாவும் சேர்க்கப்பட்டுள்ளது.

அப்பட்டியலில் கனடா, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, தைவான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் உள்ளடங்கும்.

இந்திய-அமெரிக்க வர்த்தக உறவை வலுப்படுத்த இரு நாடுகளும் முயன்று வரும் சூழலில், இந்தியாவின் பெயர் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருப்பது வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் புதிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

“உலகுக்கு ஒரு எளிய செய்தி. கண்டறியமுடியாத, சட்டவிரோத மறுஏற்றுமதிக்கான காலம் முடிவடைந்துவிட்டது,” என்று அந்த அறிக்கையில் அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

எந்த விதமான மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அறிக்கையில் விவரங்கள் இல்லை. ஆகஸ்ட் 2025ல் சட்டவிரோதமாக மறுஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களுக்கு 40 விழுக்காடு கூடுதல் வரி அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டது.

அரசாங்க, தனியார் துறை ஆய்வுகளின்படி வரிகளைத் தவிர்க்கும் மறுஏற்றுமதியால் அமெரிக்க சுங்கத் துறைக்கு $51.2 பில்லியன் முதல் $387.69 பில்லியன் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காபொருளியல்வர்த்தகம்ஏற்றுமதிஇறக்குமதிசட்டவிரோத இறக்குமதிசீனாவரிவரி ஏய்ப்பு