நைரோபி: அமெரிக்கா, 35 நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தங்களின்கீழ் 25,000க்கும் மேற்பட்டோரை நாடுகடத்தியுள்ளது. அவ்வாறு நாடுகடத்தப்பட்டோருக்கும் அந்த நாடுகளுக்கும் எந்தப் பிணைப்பும் இல்லை என்று திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வெளியிடப்பட்ட புலனாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
2025 ஜனவரியில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவியேற்றது முதல், சட்டபூர்வமாகச் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப முடியாத புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வதற்காக வளரும் நாடுகளுடன் அமெரிக்கா ஒப்பந்தங்களைச் செய்துவருகிறது.
லாபநோக்கமற்ற ‘ஃபோர்பிடன் ஸ்டோரிஸ்’ அமைப்பு புலனாய்வை நடத்தியது. சம்பந்தப்பட்டோரை ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு நேரடியாகவோ அவர்கள் திரும்புவதை எளிதாக்குவதற்காக ஐநா அமைப்புகளுக்கோ வழங்க 410 மில்லியன் அமெரிக்க டாலரை ($523 மில்லியன்) டிரம்ப் நிர்வாகம் ஒதுக்கியிருப்பதும் அதில் தெரியவந்துள்ளது.
அனைத்துலகச் செய்தியாளர்களின் கூட்டமைப்போடு இணைந்து ‘ஃபோர்பிடன் ஸ்டோரிஸ்’ சேகரித்த தரவுகளின்படி, 2026 ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 25,447 பேர் ஏற்கெனவே மற்ற நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலோர் — கிட்டத்தட்ட 20,000 பேர் — மெக்சிகோவிற்கு அனுப்பப்பட்டனர். எஞ்சியோர் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பசிபிக் வட்டாரத்தில் உள்ள 27 நாடுகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டனர். மேலும் 7 நாடுகளுடன் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
எந்த நாட்டினரை நாடுகடத்தலாம், குற்றப்பின்னணி உள்ளவர்களை ஏற்றுக்கொள்ளலாமா என்பது உட்பட இந்த ஒப்பந்தங்கள் நாட்டிற்கு நாடு மாறுபடுகின்றன.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்காக, ஆப்பிரிக்க நாடுகள் மீது அமெரிக்கா விசா தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்துக் கட்டாயப்படுத்துவதாக 2026ன் தொடக்கத்தில் ஏஎஃப்பி செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்தது.
நாடுகடத்தப்பட்டோர் எந்தவிதப் பிணைப்பும் உரிமைகளும் இல்லாத அந்நிய நாடுகளில் குற்றச்சாட்டுகள் எதுவுமின்றி அடைக்கப்பட்டு, சட்டப் படுகுழியில் தள்ளப்படுவதாக வழக்கறிஞர்கள் ஏஎஃப்பியிடம் தெரிவித்தனர். ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில் 49 நாடுகளிடம் மூன்றாம் நாட்டு அகதிகளை ஏற்றுக்கொள்வது குறித்துப் பேசப்பட்டதாக ‘ஃபோர்பிடன் ஸ்டோரிஸ்’ குறிப்பிட்டது.
2025 மே மாதம் உருவாக்கப்பட்ட, வெளியுறவுத் துறையின் அதிகம் அறியப்படாத ‘மறுகுடியேற்ற அலுவலகம்’ என்ற பிரிவே பெரும்பாலான பேச்சுகளையும் பணப்பரிமாற்றங்களையும் கையாண்டதாக ‘ஃபோர்பிடன் ஸ்டோரிஸ்’ கூறுகிறது.
