கோலாலம்பூர்: மலேசியாவின் பெட்ரோல் நிலையங்களில் ரோன்95 பெட்ரோலை வாங்க வெளிநாட்டுக் கடன் அட்டைகளையும் பண அட்டைகளையும் கூடிய விரைவில் பயன்படுத்த முடியாது.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் அந்தக் கட்டுப்பாடு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று மலேசிய உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்தது.
தகுதிபெறும் மலேசியர்கள் மட்டும் மானிய விலையில் பெட்ரோல் வாங்குவதை உறுதிசெய்யவும் வெளிநாட்டில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களில் ரோன்95 பெட்ரோல் நிரப்பப்படுவதைத் தடுக்கவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு சொன்னது.
இதற்குமுன் பல வெளிநாட்டுக் கார்கள், வெளிநாட்டுக் கடன் அட்டைகளையும் பண அட்டைகளையும் பயன்படுத்தி மலேசியாவில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்பின. அத்தகைய சம்பவங்களை அதிகாரிகளாலும் நிறுவனங்களாலும் கண்காணிக்க முடியவில்லை என்று அமைச்சு சுட்டியது.
இனி வெளிநாட்டுப் பண அட்டைகளைப் பயன்படுத்துவோர் காசாளர்களிடம் சென்று பெட்ரோலுக்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.
ஒருசில பெட்ரோல் நிறுவனங்கள் புதிய நடைமுறையை உடனடியாக அமல்படுத்த முன்வந்துள்ளன. வேறுசில நிறுவனங்கள் கட்டங்கட்டமாக அந்த நடைமுறையை அறிமுகம் செய்யும்.

