மலாக்கா: மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவால் (மித்ரா) செயல்படுத்தப்படும் ‘உயர்வு மடானி’ தொழில் மானியத் திட்டத்தின்கீழ் பயன்பெற 8,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன.
தொடக்கத்தில் அத்திட்டத்தின்கீழ் 700 பயனாளர்களுக்கு மட்டுமே மானியம் வழங்க இலக்கு வகுக்கப்பட்டிருந்தன.
இவ்வளவு அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளமைக்கு இந்தியத் தொழில்முனைவர்களின் வரவேற்பும் தேவையுமே முக்கியக் காரணங்கள் என்று மனிதவள அமைச்சர் ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பி40, எம்40 வருமானப் பிரிவைச் சேர்ந்தோர் அத்திட்டத்திற்கு பெருவரவேற்பு அளித்தனர். அத்துடன், அதிகமானோர் விண்ணப்பம் செய்ய ஏதுவாகக் கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
முன்னதாக வழங்கப்பட்டிருந்த மூலக் கால அவகாசம் மிகவும் குறுகியதாக இருந்தது என்றும், அதனால் கால அவகாசத்தை நீட்டித்த பின்னரே விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது என்றும் மலாக்காவின் பண்டார் ஹிலிரில் உள்ள லிட்டில் இந்தியா பகுதிக்குச் சனிக்கிழமை (அக்டோபர் 24) சென்றிருந்தபோது அமைச்சர் ரமணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
‘உயர்வு மடானி’ தொழில் மானியத் திட்டத்திற்கு மொத்தம் 25 மில்லியன் ரிங்கிட் (S$7.82 மில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்கீழ், உள்ளூர்த் தொழில்முனைவர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்த உதவும் வகையில், 20,000 ரிங்கிட் முதல் 50,000 ரிங்கிட் வரையிலான தனிநபர் தொழில் மானியம் வழங்கப்படுகிறது.
தொழில் வளர்ச்சிக்கு உதவுவதுடன், கல்வி நிதியுதவி, ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை, சுகாதார உதவி, மூத்த குடிமக்களுக்கான சமூகநல ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சமூக ஆதரவுத் திட்டங்களை மித்ரா தொடர்ந்து நிர்வகித்து வருகிறது என்று அமைச்சர் ரமணன் கூறினார்.
தற்போது நடைமுறையிலுள்ள திட்டங்களின் உண்மையான தாக்கத்தை மதிப்பிடவும் அடித்தட்டு மக்களின் நேரடிக் கருத்துகளைத் திரட்டவும் நேரடித் தொடர்பு முயற்சிகளும் சமூகக் கலந்துரையாடல்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
உதவி தேவைப்படுவோர்க்குச் சிறந்த முறையில் சேவையாற்றும் வகையில், எதிர்கால உதவித் திட்டங்களைச் செம்மைப்படுத்த அந்நடவடிக்கைகள் கைகொடுக்கும் எனத் திரு ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
