கோலாலம்பூர்: மலேசியாவில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் காய்கறிகளின் விலை மும்மடங்காகக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மலேசியாவில் கனமழை பெய்யும் என்றும் வெள்ளம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுவதே அதற்குக் காரணம்.
கடந்த வாரம் காய்கறிகளின் விலை 20 முதல் 50 விழுக்காடு அதிகரித்ததாக கேமரன் மலை மலாய் விவசாயிகள் சங்கத் தலைவர் சையது அப்துல் ரகுமான் சையது அப்துல் ரஷித் மலேசியாவின் பெரித்தா ஹரியான் நாளிதழிடம் கூறினார்.
அதற்குச் சான்றாக, ஒரு கிலோ தக்காளியின் விலை 80 காசு அதிகரித்ததை அவர் சுட்டினார்.
வெங்காயத் தாள், வெள்ளரிக்காய், கத்தரிக்காய், கீரை வகைகள் போன்றவற்றின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய வானிலையால் பூஞ்சைத் தொற்று பரவும் நிலையில், காய்கறி விளைச்சல் மோசமாகப் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

