அமெரிக்காவுடன் புதிய உடன்பாடு செய்த வெனிசுவேலா

அமெரிக்காவுடன் புதிய உடன்பாடு செய்த வெனிசுவேலா

2 mins read
6e0e8882-fbf5-477a-aba1-e02aebfd6347
நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்திசெய்ய அமெரிக்காவும் வெனிசுவேலாவும் உடன்பாடு செய்துகொண்டன. - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கரக்காஸ்: அமெரிக்காவுடன் வெனிசுவேலா செய்துகொண்ட எரிசக்தி உடன்பாடு அடுத்த 25 ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்று அந்நாட்டு இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் கூறியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யின் அளவை 1.5 மில்லியனுக்கு அதிகரிக்கப்போவதாகவும் இயற்கை வளங்கள்மீதான நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுடனான உடன்பாடு வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று மெச்சிய ரோட்ரிகஸ், பொருளியலை உயிர்ப்பிப்பதுடன் அரசாங்கத்தின் வருவாயையும் அது மேம்படுத்தும் என்றார்.

ஒவ்வொரு நாளும் 1.5 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்திசெய்வது ஆரம்பகட்ட இலக்கு மட்டுமல்ல என்ற அவர், இதுவரை எண்ணெய் கண்டறியப்படாத, எந்தவித உள்கட்டமைப்பும் இல்லாத முற்றிலும் எட்டுப் புதிய பகுதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

வெனிசுவேலாவின் பரந்த எண்ணெய் வளங்களின் ஒரு பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான திட்டத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

உலகின் ஆகப் பெரிய எண்ணெய் வளம்கொண்ட நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா, நாள் ஒன்றுக்கு 1.25 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை மட்டுமே உற்பத்தி செய்கிறது. அது, அதன் உத்தேச அளவைவிட மிகக் குறைவு என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான உடன்பாட்டின் மூலம் வெனிசுவேலா சராசரியாக 209 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்ட முடியும் என்று ரோட்ரிகஸ் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பீப்பாய் எண்ணெய்யும் 19 அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டாலும் வெனிசுவேலா நேரடியாகப் பலனடையும் என்றும் அரசாங்க வருமானம் பெருகும் என்றும் அவர் சுட்டினார்.

இதற்கிடையே, முன்னாள் அதிபர் நிக்கலஸ் மதுரோவைக் கைப்பற்றியதற்கான பின்விளைவுகளை வெனிசுவேலா அனுபவிக்க நேரிடும் என்று அந்நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர்.

வெனிசுவேலாவில் மில்லியன்கணக்கான மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மின்சாரத் தட்டுப்பாடு நாட்டைத் தொடர்ந்து வதைக்கிறது. அடுத்த தேர்தலுக்கான நாளும் இன்னும் குறிக்கப்படவில்லை.

அமெரிக்காவுடன் செய்துகொண்ட புதிய உடன்பாடு அதிக முதலீட்டைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்