நியூயார்க்: வெனிசுவேலா மீது அமெரிக்கா ராணுவ, பொருளியல் நெருக்குதல்களை அளிப்பதாக ரஷ்யாவும் சீனாவும் குற்றஞ்சாட்டியுள்ளன. அமெரிக்கா வெனிசுவேலாவை மிரட்டுவதாக ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றத்தில் அவை குறைகூறின.
மன்றத்தின் அவசரக் கூட்டத்திற்கு வெனிசுவேலா அழைப்பு விடுத்திருந்தது. மாஸ்கோவும் பெய்ஜிங்கும் அதற்கு ஆதரவளித்தன. வெனிசுவேலா, அதன் வரலாற்றில் ஆகப் பெரிய மிரட்டலை அமெரிக்கா விடுத்ததாகத் தெரிவித்தது.
கரிபீய வட்டாரத்திற்கு அமெரிக்கா ஆகப் பெரிய ராணுவப் படையை அனுப்பியுள்ளது. அண்மையில் வெனிசுவேலாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்களுக்கு எதிராகத் தடைவிதித்ததோடு அவற்றை இடைமறிக்கவும் செய்தது.
அமெரிக்க மக்களையும் நாட்டின் எல்லைகளையும் பாதுகாக்க வாஷிங்டன் அதன் அதிகாரத்தின்கீழ், ஆன அனைத்தையும் செய்யும் என்று அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் கூறினார்.
போதைப்பொருள் பயங்கரவாதம், ஆட்கடத்தல், கொலை போன்றவற்றுக்கு நிதியுதவி அளிக்க வெனிசுவேலா எண்ணெய் வளத்தைப் பயன்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடவில்லை என்கிறது வெனிசுவேலா. தனது அதிபர் நிக்கலஸ் மடுரோவைப் பதவியிலிருந்து அகற்றவே வாஷிங்டன் அவ்வாறு செய்வதாகக் கூறுகிறது கரகாஸ்.
திரு மடுரோவைக் கைதுசெய்ய உதவும் ஆதாரத்தைக் கொடுத்தால் 50 மில்லியன் வெகுமதி தருவதாகவும் அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு, போதைப்பொருள்களைக் கடத்துவதாகக் கூறி வெனிசுவேலாவுக்குச் சொந்தமான பல படகுகள்மீது அமெரிக்கா ஆகாயத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்கா, அனைத்துலகச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லை என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான வெனிசுவேலாவின் தூதர் சாமுவேல் மொன்க்காடா மன்றத்திடம் தெரிவித்தார். வெனிசுவேலாவின் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் நாட்டை ஒப்படைக்குமாறும் அது கோருவதாக அவர் சொன்னார்.
வெனிசுவேலாவின் வரலாற்றில் அது ஆகப் பெரிய அச்சுறுத்தல் என்றார் அவர்.

